திரிபுரா உள்ளாட்சித் தேர்தல்.. எல்லா நகராட்சிகளையும் அள்ளிய பாஜக.. சுருண்டு படுத்த எதிர்க்கட்சிகள்..!

By Asianet TamilFirst Published Nov 28, 2021, 9:31 PM IST
Highlights

மொத்தம் உள்ள 222 இடங்களில் 217 இடங்களில் பாஜக மிகப் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. வெறும் 5 இடங்களில் மட்டுமே எதிர்கட்சிகள் வெற்றி பெற்றன.

திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியை பாஜக பெற்றுள்ளது.

வட கிழக்கு மாநிலங்களுள் ஒன்று திரிபுரா. இடதுசாரிகள் கோலோச்சிய இந்த மா நிலத்தில் சுமார் 25 ஆண்டுகள் அக்கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. ஜோதிபாசுவைப் போல மாணிக் சர்க்கார் 20 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்தார்.  கடந்த 2018-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து 20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சிக்கு வந்தது. 2013-ஆம் ஆண்டில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, திரிபுராவில் ஆட்சியைப் பிடித்தது அரசியல் அரங்கை அதிர வைத்தது.

பாஜக ஆட்சி 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் 2023-ஆம் ஆண்டில்  சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. திரிபுராவில் ஒரு தேர்தல் தோல்வியிலேயே இடதுசாரிகள் பின்னடவை சந்தித்தனர். திரிபுராவில் பெரிய கட்சியாக மாறிவிட்ட பாஜகவை வீழ்த்த இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகளே திணறிவரும் நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அங்கு களம் இறங்கியுள்ளது. பாஜகவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் தீயாய் வேலை செய்து வருகிறது மம்தா கட்சி.

இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டம் போல உள்ளாட்சித் தேர்தல் திரிபுராவில் வந்தது. மாநகராட்சி, நகராட்சி என 324 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. போட்டியின்றி 112 இடங்களில் பாஜக ஏற்கெனவே வெற்றி பெற்றுவிட்ட நிலையில், எஞ்சிய 222 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையில் தொடங்கியதிலிருந்தே பாஜக முன்னிலை பெற தொடங்கியது. மொத்தம் உள்ள 222 இடங்களில் 217 இடங்களில் பாஜக மிகப் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது. வெறும் 5 இடங்களில் மட்டுமே எதிர்கட்சிகள் வெற்றி பெற்றன.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அம்பாசா நகராட்சியில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. சிபிஐ (எம்) 3 இடங்களிலும், திரிபுரா மோதா என்ற கட்சி ஓரிடத்திலும் வெற்றி பெற்றன. அகர்தலா மாநகராட்சியில் மொத்தம் உள்ள 51 இடங்களையும் பாஜக கைப்பற்றியது. மொத்தம் உள்ள 14 நகராட்சிகளையும் 6 மாநகராட்சிகளையும் பாஜகவே வென்றது.

click me!