பல்லக்கு தூக்கும் RS.பாரதி.. இந்த அடிப்படை அறிவு கூட இல்லையா? தர லோக்கலாக இறங்கிய அடித்த அதிமுக..!

By vinoth kumarFirst Published Nov 29, 2021, 6:47 AM IST
Highlights

அண்ணாவின் பெயரை பெயரளவோடு நிறுத்திவிட்டு உதயநிதிக்கு ஊதுகுழலாகவும், இன்பநிதிக்கு இன்னிசையாகவும் மாறிப்போன பாரதிக்கு அறிக்கையின் சாராம்சத்தை அறியவும், விலக்கி புரிந்து கொள்ளவும் முற்றிலும் வாய்ப்பில்லை.

சத்துணவுக் கூடம் பள்ளி மாணவர்களுக்கானது, அம்மா உணவகம் என்பது ஏழை மக்களுக்கானது என்பதை கூட புரிந்துகொள்ள முடியாத ஆர்.எஸ்.பாரதி, அறிவுக் கண்ணை மறைத்துக்கொண்டு அறிக்கை விடுகிறார் என அதிமுகவை சேர்ந்த பாபு முருகவேல் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அம்மா உணவகங்களை இரட்டடிப்பு செய்யவே கலைஞர் உணவகங்கள் தொடங்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் விடுத்த அறிக்கைக்கு பதில் அறிக்கை விட்ட திமுகவின் ஆர்.எஸ்.பாரதிக்கு அடிப்படை அறிவு கூட இல்லையா என காட்டமாக பாபு முருகவேல் கூறியுள்ளார். இதுதொடர்பாக அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- அண்ணாவின் பெயரைச் சொல்லி தங்களின் அண்ணன் தம்பிகளை வளர்ப்பதை தவிர வேறு வளர்ச்சியை உங்களால் யாரும் கண்டதில்லை. அண்ணாவின் பெயரை பெயரளவோடு நிறுத்திவிட்டு உதயநிதிக்கு ஊதுகுழலாகவும், இன்பநிதிக்கு இன்னிசையாகவும் மாறிப்போன பாரதிக்கு அறிக்கையின் சாராம்சத்தை அறியவும், விலக்கி புரிந்து கொள்ளவும் முற்றிலும் வாய்ப்பில்லை.

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் இன்றைக்கு ஒரு குடும்ப பிடியில் சிக்கி இருப்பதும் அந்த குடும்பத்திற்கு அடிமை சாசனம் எழுதி தந்து பல்லக்கு தூக்க தயாராக இருக்கும் பாரதிக்கு புரியவில்லை. சத்துணவு திட்டம் எது, அம்மா உணவகம் எது என்பதைப்பற்றி. அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக தனக்கான அரசியல் செய்யும் பாரதியின் அறிக்கையில் தெரியப்படுத்தி இருக்கிறார். இந்த அரசே மக்களுக்கான பேரிழப்பாக பெருவாரியான மக்கள் கருதக்கூடிய இந்த சூழ்நிலையில் இழப்பைப் பற்றி பாரதி பேசக்கூடாது. 200 கோடி ரூபாயை ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்து பெற்று அதை கணக்கில் சேர்த்து உடனடியாக அதே நிறுவனத்திற்கு மீண்டும் அந்தப் பணம் சென்றதாக எப்படி உங்களால் கணக்கு காட்ட முடிந்ததோ அதேபோல வருமானவரித்துறை அனுப்பி இருக்கக்கூடிய நோட்டீஸுக்கு பதிலளிக்க எங்களுக்கும் தெரியும். உங்களைப்போலவே நீதிமன்றங்கள் ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல உங்களுக்கு இருக்கக்கூடிய அதே சட்டத்தின் வாய்ப்புகள்தான் எங்களுக்கும் இருக்கிறது எங்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கக்கூடிய நோட்டீசை பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை.

தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்த அரசைப் பார்த்து மக்கள் நிறைய கேள்விகளை எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கேட்பதற்கு தயாராக இருக்கிறார்கள். ஒரு பிரச்சனையை மடைமாற்றி அதை திசை திருப்புவதில் உங்களை மிஞ்ச இந்த உலகத்தில் ஆளே இல்லை. எப்படி  பட்டியல் இனத்திற்கு எதிராக எவ்வளவு கீழ்த்தரமாக பேசினீர்களோ, பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள் நீங்கள் போட்ட பிச்சையினால்தான் உயர்நீதிமன்ற நீதியரசர் களாக ஆனார்கள் என்று நீதித்துறையை எப்படி கொச்சைப்படுத்ததினீர்களோ, யாருமே சொல்லத் துணியாத மிகக் கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி பத்திரிகை ஊடகத்துறையை கொச்சைப்படுத்தி, இந்த விடயங்களை எல்லாம் மடை மாற்றுவதற்காக அடுத்தடுத்து தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடுவது நீங்கள்தானே ஒழிய எந்த ஒரு விடயத்தையும் மறைப்பதற்கு, மடை மாற்றுவதற்கு நாங்கள் ஒரு போதும் எண்ணியதும் இல்லை, உங்களைப்போல தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடுவதும் இல்லை.

200 நாட்களில் 205க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருப்பதாக மார்தட்டிக்கொள்ளும் பாரதி உள்ளிட்டோர் அந்த 205 எது எது என்பதையும் அதேபோல நெஞ்சம் நிமிர்த்தி பட்டியலிட்டு சொன்னால் உங்களோடு சேர்ந்து நாங்களும் உளம் மகிழ காத்திருக்கிறோம். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்தப் பட்டியலை கேட்டு 60 நாட்களுக்கும் மேலாக ஆகிறது. தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் மூக்கை நுழைத்து அறிக்கை விடும் பாரதி இந்த 205 தேர்தல் வாக்குறுதிகளையும் நெஞ்சம் நிமிர்த்தி பட்டியலிட்டால் பாராட்டுக்குரியது. அது சரி செய்திருந்தால் தானே பட்டியலிட முடியும், சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.  உங்களுடைய தலைவரை நீங்கள் பெருமைப் படுத்திக் கொள்ளுங்கள், அவருடைய புகழை உலகெங்கும் பறைசாற்றுங்கள், அதற்குண்டான முன்னெடுப்பை அரசின் பணத்திலிருந்து கூட செய்து கொள்ளுங்கள் அது உங்களுடைய விருப்பம். 

மாறாக, தன்னுடைய குடும்பத்திற்கு, உற்றார் உறவினர்களுக்கு, தான் சார்ந்தவர்களுக்கு என்று ஒருநாளும் என்னாமல் இந்த தமிழகமே என் வீடு தமிழக மக்களே என் உறவு என்று வாழ்ந்து மறைந்த மனிதப் புனிதர் அம்மா அவர்களின் திட்டங்களையோ அவரின் மாபெரும் பெயருக்கான புகழையோ களங்கப்படுத்த ஒரு நாளும் நாங்கள் மட்டுமல்ல அவரை ஏற்றுக்கொண்டுள்ள அவர் மீது மாறா பற்று கொண்ட பொதுமக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  கடையேழு வள்ளல்களில் எட்டாவது வள்ளலாக வாழ்ந்து மறைந்த புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் கொண்டுவந்த, உணவு இல்லை என மாணவச் செல்வங்கள் படிப்பை இடைநிறுத்த கூடாது. அவர்கள் தொடர்ந்து கல்வி பயின்று வாழ்க்கையில் மேன்மை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட சத்துணவு திட்டத்திற்கும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள, வாழ்கையை தினம் தினம் நகர்த்திச் செல்வதற்கு கூட மிகவும் சிரமப்படுகின்ற. அண்டை மாநிலங்களிலிருந்து வந்து தங்கி தொழில் புரிகின்ற தொழிலாளிகளுக்கும், ஆதரவற்றோர் களுக்கும் மிக மிக குறைந்த விலையில் மிக மிக தரமான உணவை வழங்க வேண்டும் என்ற சேவை நோக்கோடு தொடங்கப்பட்ட அம்மா உணவகத்திற்கும் உள்ள வித்தியாசத்தின் அடிப்படை அறிவு கூட இல்லாமல் போனதே பாரதி.  அது சரி அடிமை சாசனம் எழுதி தந்தவர்களுக்கு எப்படி தெரியும் வேறுபாடும் வித்தியாசமும்.

உண்மையை ஒப்புக் கொண்டதற்கு உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் காரணம் அடித்தட்டு மக்கள், வெளிமாநில தொழிலாளர்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் இன்றைக்கு வயிராற உணவு உண்டு கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு அடிப்படைக் காரணம் அம்மா அவர்கள் தொடங்கிய அம்மா உணவகம் என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டதற்கு. வரலாற்றை மறைத்து, தமிழர் தம் பெருமைகளை மறைத்து, தாங்கள் தான் வரலாறு, தமிழ் இனத்தை காக்க வந்தவர்கள் நான் மட்டும்தான் என்று இருந்த கருணாநிதியின் கருத்தை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் பாடப் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டதே ஒழிய வேறு காரணம் அதற்கு நீங்கள் கற்பித்துக் கொள்ளலாம். பல கோடி ரூபாய் அரசு பணம் வீணாகி விடக்கூடாது என்பதற்காக அம்மாவின் படத்தையும், எதிர்க்கட்சித் தலைவரின் படத்தையும் பள்ளிக்கல்வித்துறை நீக்கவில்லை என்ற செய்தியை உங்களுடைய வெற்று அறிக்கையில் சொல்லி இருக்கிறீர்கள் அதற்கு காரணம் நீக்கி இருந்தால் நிச்சயம் மக்கள் அவர்தம் நெஞ்சங்களில் இருந்து உங்களை நீக்கி விடுவார்கள் என்ற காரணம் தானே ஒழிய, நீங்கள் சொன்னது அல்ல. 

எப்படி அம்மாவின் படத்தையும்  எதிர்க்கட்சித் தலைவரின் படத்தையும் தொடர மக்களுக்கு பயந்து அனுமதி அளித்தீர்களோ அதேபோல அம்மா உணவகத்தை யும் எந்தவிதமான பெயர் மாற்றமோ, உணவகத்தின் எண்ணிக்கை குறைப்போ, உணவகத்தின் தரம் குறைத்தோ, உணவுப் பட்டியலில் எண்ணிக்கை குறைத்தோ வழங்காமல் உணவகத்தை கூடுதலாகவும், இருக்கக்கூடிய பணியாளர்களை தொடர்ந்து பணியாற்ற அனுமதி வழங்கியும், அதே தரத்தோடு வழங்க வேண்டும் என்று ஒப்பற்ற நோக்கத்தோடு வழங்கப்பட்ட அறிக்கையை அறிவுக்கண்மூடி படித்த பாரதி, அறிவுக் கண்ணை திறந்து புரிந்துகொள்ளவேண்டும் என்றும், குற்றம் யார் செய்தாலும் குற்றம் என்று ஒற்றை விரலை உயர்த்தி, நெஞ்சம் நிமிர்த்தி கம்பீரமாக நின்று கொண்டிருக்கக் கூடிய அண்ணாவை மறந்து அவரின் பெயரால் வயிற்றை நிரப்பி வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவர்கள் மற்ற விரல்களை பற்றி கவலைப்பட தேவையில்லை என்றும், வரக்கூடிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழக நலன் சார்ந்து முதுகெலும்போடு நீங்கள் பேசுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். எனவே அறிக்கை என்ற பெயரில் மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதை விட்டு நீங்கள் விரும்பும் கொத்தடிமை வேலையை தொடர்ந்து சிறப்பாக செய்யுங்கள் என பாபு முருகவேல் குறிப்பிட்டுள்ளார்.

click me!