டெல்லி செல்ல தயாராகும் ஓபிஎஸ்-இபிஎஸ்...! தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக மோடி, அமித்ஷாவை சந்திக்க திட்டம்

By Ajmal KhanFirst Published May 10, 2022, 10:44 AM IST
Highlights

டெல்லியில் அதிமுக தலைமையக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த மாதம் திறப்பு விழா நடைபெறுகிறது. இந்த திறப்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அழைக்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளது. 
 

டெல்லியில் மாநில கட்சிகளும் இடம்

பாராளுமன்றத்தில் 7 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள கட்சிகளுக்கு டெல்லியில் கட்சி அலுவலகம் கட்டுவதற்கு இடம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததின் அடிப்படையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கடந்த 2013-ம் ஆண்டு டெல்லி  பகுதியில் அதிமுக, தி.மு.க. கட்சிக்கு உள்ளிட்ட மாநில கட்சிகளுக்கு அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது.  தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் திமுகவிற்கு கொடுப்பட்ட இடத்தில்  கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

19 ஆயிரம் சதுர அடியில் அதிமுக அலுவலகம்

இதே போன்று அதிமுகவிற்கு 19 ஆயிரம் சதுர அடியில் டெல்லியில் சாகேத் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தில் அதிமுக அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. 3 மாடி கட்டிடமாக அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. இந்த கட்டிடம் கட்டுமான பணியை டெல்லி சென்றிருந்த போது ஓபிஎஸ், இபிஎஸ் நேரில் பார்வையிட்டனர். தற்போது இந்த கட்டிட கட்டுமான பனி முடிவடைந்துள்ளது. கட்டிடத்தில் மாநகராட்சி அனுமதி, தீயணைப்பு துறை அனுமதி ஆகியவற்றை தற்போது பெறப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த கட்டிடம் அடுத்த மாதம் திறக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.  இதற்கான ஏற்பாடுகளை அதிமுக செய்து வருகிறது. இந்தநிலையில் விழாவிற்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர்களை அழைக்கும் வகையில் விரைவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக தலைவர்களை சந்திக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ்

டெல்லி சென்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திக்கும் பொழுது தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பின் போது நீட் விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் அனுமதியை வழங்குமாறு அதிமுக சார்பாக கோரிக்கை வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கு இன்றும் ஒன்றரை வருடங்களே உள்ள நிலையில் அதற்கான திட்டமிடுதல் தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது  ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. 
 

click me!