
திமுகவில் பாஜக எம்.எல்.ஏ
திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா, நேற்று முன்தினம் பாஜகவில் இணைத்துக்கொண்டார்.கமலாலயத்துக்கு வந்த சூர்யா சிவா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா சிவா, திமுக குடும்ப கட்சி பிடியில் உள்ள நிலையில், ஒரு சில குடும்பங்களுக்கு உழைப்பதற்கு பதில் பாஜகவில் இணைந்து மக்களுக்காக சேவை செய்வதற்காக இணைந்துள்ளதாக தெரிவித்தார். பாஜகவில் திமுகவின் முக்கிய எம்பி யான திருச்சி சிவாவின் மகன் இணைந்தது தொடர்பாக சமூக வலை தளத்தில் கருத்துகள் பகிரப்பட்டது. இந்தநிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜக உங்களுக்கு ஒரு தகவல். உங்க கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கிவிடுவோம் என பதிவிட்டுள்ளார். இந்த தகவல் பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வேறு கட்சிக்கு செல்ல மாட்டார்கள்
அந்த இரண்டு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் யார் என்ற விவாதம் சமூக வலை தளத்தில் பரவலாக பேசப்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக சட்ட மன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தனது டுவிட்டர் பக்கத்தில் செந்தில்குமார் எம்பியின் பதிவை ரிடுவிட் செய்து ‛முடிந்தால் தூக்குங்கள்.. பார்க்கிறோம்' என குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் கூறியதற்கு பதில் அளித்தார், பாஜக சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட யாரும் வேறு கட்சிக்கு போக மாட்டார்கள் என கூறினார். மேலும் தற்போது காங்கிரஸ் அழிவது போல் திமுகவும் அழியும் என தெரிவித்தார்.