
நாகப்பட்டினம்
காலதாமதமாக பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவதை கண்டித்து வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக எதிர்க் கட்சிகள் அறிவித்திருப்பது விதண்டாவாதமானது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் “தமிழகத்தில் வறட்சி நிவாரணம் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டுவிட்டது.
2016 - 17-ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகைக்கு மாநில அரசின் பங்காக ரூ.410 கோடி அளிக்கப்பட்டு உள்ளது.
இழப்பீட்டு மதிப்பை கணக்கிடும் காப்பீட்டு நிறுவனமே அதற்கான தொகையை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வருகிறது. பணிகளை விரைவுப்படுத்த மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.
பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் ஏற்படும் கால தாமதத்திற்கு காப்பீட்டு நிறுவனமே பொறுப்பு.
எனவே, பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் ஏற்பட்டுள்ள கால தாமதத்தைக் கண்டித்து அக்டோபர் 5-ல் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக எதிர்க் கட்சிகள் தெரிவித்திருப்பது விதண்டாவாதமானது” என்று பேட்டியளித்தார்.