தமிழகத்தில் புதிய டிரெண்ட்... ஒரு கட்சியிலிருந்து விலகியதும் தேர்தலில் சீட்டு கொடுக்கும் கலாச்சாரம்..!

By Asianet TamilFirst Published Mar 14, 2021, 9:55 PM IST
Highlights

தேர்தல் சமயத்தில் ஒரு கட்சியிலிருந்து விலகி இன்னொரு கட்சியில் சேருவோருக்கு உடனே சீட்டு கொடுக்கும் புதிய கலாச்சாரம் தமிழகத்தில் தொடங்கியுள்ளது.
 

தேர்தல் சமயத்தில் வேட்பாளர்கள் அறிவிப்புக்கு பிறகு ஒவ்வொரு கட்சியிலும் அதிருப்தி ஏற்படுவது வழக்கம். வேட்பாளர்களை எதிர்த்து தொண்டர்கள் போர்க்கொடி உயர்த்துவதும் வாடிக்கை. சீட்டு கிடைக்காத அதிருப்தியில் ஒரு கட்சியை விட்டு இன்னொரு கட்சிக்கு செல்வோரையும் இந்தக் காலகட்டத்தில் பார்க்க முடியும். அப்படி அதிருப்தியில் கட்சி மாறுவோரின் அரசியல் வளர்ச்சியும் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது.
ஆனால், அண்மையில் சீட்டு கிடைக்காமல் மாற்று கட்சியில் இணைந்த இரு எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக அந்தக் கட்சிகளின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நிகழ்வு தமிழகத்தில் நடந்தேறியிருக்கிறது. சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கு அதிமுகவில் சீட்டு மறுக்கப்பட்டது. இதனையடுத்து அவர் டிடிவி தினகரனின் அமமுகவில் இணைந்தார். காலையில் அமமுகவில் இணைந்த அவருக்கு மாலையே சாத்தூரில் அமமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இதேபோல திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கோரினார். அந்தத் தொகுதி சிபிஎம்-க்கு ஒதுக்கப்பட்டதால் வேறு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால், அவருக்கு திமுக தலைமை வாய்ப்பு தராத நிலையில், அதிருப்தி அடைந்தார். இதனையடுத்து இன்று காலை பாஜகவில் டாக்டர் சரவணன் இணைந்தார். காலையில் பாஜகவில் இணைந்தவருக்கு மதியம் பாஜக சார்பில் மதுரை வடக்கில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சியில் சேருவோருக்கு உடனே கட்சியில் வாய்ப்பு அளிக்கும் புதிய ட்ரெண்ட் தமிழகத்தில் உருவாகியிருக்கிறது.  

click me!