தேவேந்திர என்ற பெயரும் நரேந்திர என்ற என் பெயரும் ஒத்துபோகிறது.. ஒட்டுமொத்த சமூகத்தையும் சொந்தம் கொண்டாடிய மோடி

By Ezhilarasan BabuFirst Published Feb 14, 2021, 2:04 PM IST
Highlights

தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 7 சாதிகளை ஒருங்கிணைத்து அவர்கள் இனி தேவேந்திர குல வேளாளர் என அழைக்கப்படுவர் எனவும், அவர்கள் இனி பட்டியலினத்தவர்  என அழைக்கப்பட மாட்டார்கள் எனவும் மோடி அறிவித்துள்ளார்.  

தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 7 சாதிகளை ஒருங்கிணைத்து அவர்கள் இனி தேவேந்திர குல வேளாளர் என அழைக்கப்படுவர் எனவும், அவர்கள் இனி பட்டியலினத்தவர்  என அழைக்கப்பட மாட்டார்கள் எனவும் மோடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் மாநில பட்டியலினத்தில் உள்ள தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட வேண்டும் என்று அந்த சமூகத்தினர் மற்றும் புதிய தமிழகம் கட்சி மற்றும் தலித் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் மோடி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது, இதனால் முக்கிய கட்சிகள் தேர்தல் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் இறங்கியுள்ளன, தமிழகத்தில் வலுவாக காலூன்ற வேண்டும் என்பது பாஜகவின் நெடுநாளைய ஆசை, வரும் தேர்தலை அதிமுக உடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது இந்நிலையில் ஒரு நாள் அரசு முறை பயணமாக இன்று தமிழகம் வருகை தந்த பிரதமர், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது மேடையில் தேவேந்திர குலவேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மோடி அறிவிப்பு வெளியிட்டார். அப்போது அவர் உரையாற்றியதாவது:  

தமிழ் நாட்டின் கலாச்சாரத்தை பாதுகாப்பது அதன் திசையில் பணியாற்றுவது என்பது கவுரவம் அளிக்கும், அந்த வகையில் கலாச்சரம் நிறைந்த சமூகமான இன்றைய தமிழ் நாட்டில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் சகோதர சகோதரிகளுக்கு எனது ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன், தங்களை தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்க வேண்டும் என்ற அவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது.  இனி தேவேந்திர குலவேளாளர் அவர்களின் பாரம்பரிய பெயரால் அழைக்கப்படுவார்கள். அவர்கள் இனி பட்டியலின மக்கள் என அழைக்கப்பட மாட்டார்கள். அவர்களின் பெயரை தேவேந்திர குல வேளாளர்கள் என்று அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யும் வரைவு அரசாணைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் துவக்கத்திலேயே, இது அவையில் முன்வைக்கப்படும்,  இந்த கோரிக்கை தொடர்பான ஆய்வு மேற்கொண்ட தமிழக அரசுக்கு என் சிறப்புமிக்க நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 

தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கையை, தமிழ்நாடு அரசு நீண்டகாலமாகவே ஆதரித்து வந்திருக்கிறது,  நண்பர்களே டில்லியில் 2015ஆம் ஆண்டில் ஒரு தேவேந்திரர்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பை என்னால் ஒருபோதும் மறுக்க இயலாது. அப்போது அவர்களின் வருத்தத்தை நான் காண முடிந்தது. காங்கிரஸ் அரசு அவர்களது கண்ணியத்தை பறித்துக் கொண்டது, பல தசாப்தங்களாக எதுவுமே நடைபெறவில்லை, அவர்களின் கோரிக்கை அரசிடன் எடுபடவில்லை. அப்போது நான் அவர்களிடம் ஒரு விஷயத்தை மட்டும் கூறினேன், அவர்களின் பெயரான தேவேந்திரன் என்பது என்னுடைய நரேந்திர என்ற பெயருடன் ஒத்திருக்கிறது என்பதைக் கூறி, டெல்லியில் அவர்களில் ஒருவனாக அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டவனாக நான் இருக்கிறேன் என்று நான் அவர்களிடம் பகிர்ந்தேன். 

7 உட்பிரிவுகள் இனி தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்கப்படுவர். இந்தத் தீர்மானம் வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல, இது நீதி, ஒரு சமூகத்தின் கவுரவம், அவர்களுக்கான வாய்ப்பு பற்றியது, தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தில் கலாச்சாரத்திலிருந்து  நாம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. அவர்கள் நல்லடக்கம், நேசம், சகோதரத்துவம், கவுரவத்தை கொண்டவர்கள், அவர்களுடையது ஒரு நாகரிகம் சார்ந்த இயக்கம்.  சுய நம்பிக்கையை, சுய கவுரவத்தையும் இது வெளிப்படுத்துகிறது. என்றார்.  

 

click me!