
தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரியும் அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரியும் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது.
முதல்வர் பழனிச்சாமி அரசு மீதான ஆதரவை திரும்பப் பெற்றதற்காக தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தார். இதையடுத்து அந்த தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கத்தை ரத்து செய்யக்கோரியும் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தடை கோரியும் கே.கே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் தமிழகம், இடைத்தேர்தல் நடத்துவதன் மூலம் மேலும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்பதால் இடைத்தேர்தல் நடத்த தடை கோருவதாக அந்த மனுவில் ரமேஷ் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் பொதுநலன் என எதையும் கருத்தில் கொள்ள முடியாது என்பதால் எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கத்திற்கு ரத்து கோரிய இந்த வழக்கை விசாரிக்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.