சென்டிமெண்டுகளால் நிறைந்தது தமிழக அரசியல். அதிலும் அ.தி.மு.க.வில் எல்லாம் நடப்பது சகுனங்களின் அடிப்படையில்தான். ஜெயலலிதா இருக்கும் போது தினமும் காரில் கால்வைப்பதில் தொடங்கி, கோப்புகளில் கை வைப்பது வரை எல்லாமே நேரங்காலம் பார்த்துத்தான் செய்வார்.ஜெயலலிதா போலவே எல்லாவற்றையும் செய்து பழக்கப்பட்டுவிட்ட எடப்பாடி பழனிசாமியும் அநியாயத்துக்கு நல்ல நேரம், கெட்ட நேரம், ஜாதகம், தோஷம், பரிகாரம் போன்றவற்றில் ஓவர் நம்பிக்கையுடையவராக இருக்கிறார்.இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நிகழ்ந்த தீ விபத்தின் மூலம் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது, ஆட்சிக்கு கண்டம் கண்டிருக்கிறது என்று கணித்துக் கூறியிருக்கிறார் ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்.இதுகுறித்து கணிப்புகளை வெளியிட்டிருக்கும் அவர் “மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதால் ஆட்சி கலைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. குறிப்பா பார்க்கும் போது மார்ச் 11-ல் இருந்து ஆட்சிக்கு சிக்கல்கள் உருவாகலாம்.எடப்பாடியாரின் ஜாதகம் கடுமையாகத்தான் இருக்கிறது.” என்று சொல்லியிருக்கிறார்.வித்யாதரன் கணித்துச் சொல்லியிருக்கும் இந்த ஆரூடங்கள் ஆளும் அணியின் ஒரு சாராரின் வயிற்றைக் கலங்க வைத்திருக்க, அதே ஆளும் அணியில் மற்றொரு அணியான பன்னீரின் அணியோ குஷியிலிருக்கிறதாம்.காரணம் ஜாதகம் சரியில்லாமல் எடப்பாடியார் பதவி இறங்கினால் ஒரு வேளை பன்னீர் முதல்வராகலாம் எனும் எண்ணம்தான்.ஆனால் தினகரன் மற்றும் ஸ்டாலின் ஆகிய எதிர் அணி மற்றும் கட்சியினர் ஏக போக சந்தோஷத்தில் இருக்கிறார்கள். மூன்று மாதத்தில் இந்த ஆட்சிக்கு முக்காடு விழுந்துவிடும் என்று இப்போதே கூத்தாட துவங்கிவிட்டனர்.