ரஜினிகாந்த் திட்டமிட்டுதான் இதையெல்லாம் செய்கிறாரா அல்லது தானாக அது நடக்க, அவருக்கு கெத்து ஏறுகிறதா என்று புரியவில்லை ஆனால் தலைமை செயலகத்தினுள்ளேயே புகுந்துவிட்டது ரஜியின் படை!ஆட்சியாளர்களாக மாறும் அரசியல்வாதிகளின் ஆட்டமெல்லாம் ஐந்து ஆண்டுகள்தான். அடுத்த தேர்தலில் மக்கள் தூக்கி எறிய வாய்ப்பு உண்டு. ஆனால் அதிகாரிகள் மட்டும் ஓய்வு பெறும் வயது வரை உள்ளேயே இருந்து கொண்டு தனியாவர்த்தனம் செய்வார்கள். சொல்லப்போனால் ஆளும் கரைவேஷ்டிகளுக்கு ஊழல் செய்ய கத்துக் கொடுப்பதே அரசு அதிகாரிகள்தான். காரணம அவர்களுக்குதான் எங்கே, எதில், எப்படியெல்லாம் பணம் குவியும், எப்படி கமிஷன் அடிக்கலாம் என்பது புரியும் என்பார்கள். ஆனால் எல்லா அதிகாரிகளும் ஊழலுக்கு துணை போகிறவர்கள் இல்லையே! அரசாங்கத்திடம் வாங்கும் நேர்மையான சம்பளத்துக்கு மக்களுக்கு நல்லது மட்டுமே செய்ய வேண்டும் எனும் எண்ணத்துடன் வாழும் அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிலும் தமிழக அரசின் தலைமையகமான ஜார்ஜ் கோட்டையிலும் கூட பல நேர்மையான அதிகாரிகள் இருக்கிறார்கள். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் பணத்தில் மஞ்சள் குளிக்கும் புத்தி மாறவே மாட்டேன் என்கிறதே! என்கிற வருத்தத்தில் இருந்த இவர்கள், ஒரு மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இந்த நிலையில் ‘சிஸ்டம் சரியில்லை’ என்று குரல் கொடுத்த ரஜினியின் போர்க்குரல் இவர்களுக்கு நம்பிக்கையை தந்திருக்கிறது. ரஜினியை ஆதரிக்க தயாராகிவிட்டாரக்ள். ஜார்ஜ் கோட்டை அதிகாரிகளில் நேர்மையாக நடக்கும் நபர்களில் பலர் இப்படி மளமளவென சூப்பர் ஸ்டாரின் கூடாரத்தை ஆதரிக்க துவங்கியிருக்கும் அதே வேளையில், சூப்பர் ஸ்டார் கட்சி துவங்க நாளாகும் என்பதால் அதுவரையில் வேறு வகையில் அவருக்கு தோள்கொடுக்க தயாராகிவிட்டார்கள். அதாவது கட்சி துவங்குவதற்கு முந்தைய தயாரிப்புகளில் பிஸியாக இருக்கிறார் ரஜினி. கட்சி ஆரம்பித்ததும் தங்களின் கொள்கையாக அவர் வெளியிட இருக்கும் விஷயங்கள் ‘சரியில்லாத சிஸ்டத்தை சரி செய்யும் தொனியில் இருக்க வேண்டும்.’ என்பது ரஜினியின் எண்ணம். இதற்காக தமிழக அரசு நிர்வாகத்திலிருக்கும் பல நேர்மையான அதிகாரிகளை தனியே சந்தித்து, சிஸ்டம் சரியாக வேண்டுமென்றால் என்னென்ன செய்ய வேண்டும்?! என்பது பற்றி தரவுகளை திரட்டுகிறது ரஜினியின் டீம். இதற்கு அந்த அதிகாரிகளும் முழு ஆதரவு தருகிறார்கள். இந்நிலையில் ரஜினிக்கு நெருக்கமாக, அவரது மன்ற நிர்வாகத்திலுள்ள ஒரு நபர் சமீபத்தில் தலைமை செயலகத்துக்குள்ளேயே நுழைந்து சில உயரதிகாரிகளை சந்தித்தாராம். ஏக வரவேற்பாம் அவருக்கு. சர்வ சந்தோஷத்துடன் இருக்கையில் அமர்ந்தவர், ரஜினி மன்றத்திற்கான விண்ணப்ப படிவங்களை எடுத்து சில அதிகாரிகளிடம் கொடுத்திருக்கிறார். அவர்களும் வாங்கிக் கொண்டு ‘எனக்கு தெரிஞ்ச வட்டாரத்தில் உள்ளவங்களை இணைக்கிறேன்.’ என்று உறுதி தந்தார்களாம். ரஜினி படையிலிருந்து நிர்வாகிகள் இப்படி கோட்டைக்குள்ளேயே வந்து உறுப்பினர் படிவத்தை கொடுப்பதை ஆளும் வர்க்கத்துக்கு விசுவாசமான நபர்கள் கவனித்துவிட்டார்கள். உடனடியாக மேலேயும் தகவலை கொண்டு சென்று, கையோடு துறை ரீதியாக சைலண்டாக என்கொயரியும் நடந்ததாம். விசாரணையின் முடிவு இன்னும் வெளியாகவில்லை. யார் அவன், எப்படி உள்ளே வரலாம்? நீங்க என்ன உளவு சொல்றீங்களா! என்று கொதிப்பான கேள்விகள் அடுத்தடுத்து வந்து விழுந்ததாக தகவல். எனிவே! கோட்டைக்குள்ளேயே ரஜினியின் படை புகுந்திருப்பது அதிகார வட்டாரத்தை ஜெர்க்காக்கி உள்ளது. நேர்மையான அரசு அதிகாரிகளை ரஜினி டீம்தான் தேடிப்பிடித்து தங்களின் ஆதரவாக்கி கொள்கிறதா அல்லது இவர்களே அவரது தரப்பை நாடிச்சென்று தகவல்களை அள்ளித் தட்டுகிறார்களா என்பதுதான் ஆளும் தரப்புக்கு குழப்பமாக இருக்கிறது. எப்படி பார்த்தாலும் அரசியலுக்கு வரும் முன்பேயே ரஜினி காட்டும் பெரிய கெத்தாகவே இதை பார்க்கிறார்கள்.