தனது தொகுதியில் எந்த பணியும் நடைபெறவில்லையென மதுரை மாநகராட்சி கூட்டத்தில் புகார் தெரிவித்த மதுரை தெற்கு தொகுதி மதிமுக சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருப்பதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது,
மக்கள் கோரிக்கை நிறைவேற்ற முடியவில்லை
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சியானது நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்தநிலையில் மதுரை மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் தொகுதியில் உள்ள பிரச்சனைகளை முன் வைத்தனர்.
மேலும் துணை மேயர், மண்டல குழு தலைவர்கள் உள்ளிட்டவர்கள் தங்கள் பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சனைகளை சரிசெய்யவில்லையென குற்றம்சாட்டினர். இதன் காரணமாக மாநகராட்சி கூட்டம் தொடங்கியதில இருந்து பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. இப்போது மாநகராட்சி கூட்ட அரங்கிற்கு வந்த மதுரை தெற்கு தொகுதி மதிமுக சட்டமன்ற உறுப்பினர் பூமி நாதன் பேச அனுமதி கேட்டார்.
பதவியை ராஜினாமா செய்யவும் தயார்
இதனையடுத்து பூமிநாதன் பேச மேயர் இந்திராணி அனுமதி வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக தெரிவித்தவர், இது தொடர்பாக பலமுறை கோரிக்கை வைத்த நிலையில் எந்த பணியும் நடைபெறவில்லையென கூறினார். இதன் காரணமாக பொதுமக்கள் தன்னை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் நிலை இருப்பதாக தெரிவித்தார். மேலும் தனது தொகுதி பக்கமே தன்னால் செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் வேதனையோடு குறிப்பிட்டார்.
மேலும் மக்களுக்கு சேவை செய்யதான் எம்எல்ஏ பதவிக்கு வந்ததாகவும், ஆனால் பணிகளை சரியான முறையில் செய்ய முடியாத காரணத்தால் பதவியை ராஜினாமா செய்யும் மனநிலைக்கு வந்துவிட்டதாக குறிப்பிட்டார்.மதிமுக எம்எல்ஏ பேச்சால் மதுரை மாநகராட்சி கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படியுங்கள்