தி காஷ்மீர் பைல்ஸ் படம் ஆதாரமற்ற கட்டுக் கதை... கே.எஸ்.அழகிரி சாடல்!!

By Narendran SFirst Published Mar 17, 2022, 10:52 PM IST
Highlights

தி காஷ்மீர் பைல்ஸ் படம் ஆதாரமற்ற கட்டுக் கதை என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

தி காஷ்மீர் பைல்ஸ் படம் ஆதாரமற்ற கட்டுக் கதை என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது, காஷ்மீர் மாநிலத்தை இணைப்பதில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. அந்த மாநிலத்தில் வாழ்கிற 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்கள் இஸ்லாமியர்களாக இருந்ததால் அந்தப் பகுதி பாகிஸ்தானுடன் இணைவதா? இந்தியாவுடன் இணைவதா? என்ற சிக்கலான நிலைமை ஏற்பட்டது. இந்தச் சூழலில் காஷ்மீர் மக்களின் ஒப்பற்றத் தலைவராக இருந்தவரும், மதச்சார்பற்ற கொள்கையில் நேரு தோளோடு தோள் நின்று பணியாற்றியவருமான ஷேக் அப்துல்லா காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்க வேண்டுமென்று விரும்பினார். முஸ்லிம் நாடான பாகிஸ்தானுடன் இணைக்க அவர் விரும்பவில்லை. அப்போது, காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஷேக் அப்துல்லாவுக்கும் இடையே இருந்த நட்புறவுதான்.

Latest Videos

அந்த நட்பின் காரணமாகவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, உறுப்பு 370 அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு, சிறப்புச் சலுகையுடன் காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அப்போது, அந்த சிறப்புச் சலுகை வழங்கப்படாமல் இருந்திருந்தால் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்திருக்காது. இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்த வரலாற்றுப் பின்னணியை முற்றிலும் சிதைக்கிற வகையில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பு 370ஐ ரத்து செய்து விட்டு, அந்த மாநிலத்தை, அம்மாநில மக்களின் ஒப்புதலைப் பெறாமல் மூன்று பிரிவுகளாகப் பிரித்து விட்டது. இதனால் அங்கே வாழ்கிற மக்கள் பாதுகாப்பற்ற நிலையிலும், அங்குள்ள அரசியல் தலைவர்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியாமலும் மோடி ஆட்சியால் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுக் கிடக்கிறார்கள். அவர்களது பேச்சுரிமையும் கருத்துரிமையும் பறிக்கப்பட்டுள்ளன.

காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மூடி மறைப்பதற்காகவும், திசை திருப்புவதற்காகவும், அந்த மாநிலத்தில் இஸ்லாமியர்களோடு சகோதர, சகோதரிகளாக வாழ்ந்த பண்டிட்டுகளுக்கு கொடுமைகள் இழைக்கப்பட்டதாக ஆதாரமற்ற அவதூறு கருத்துகளைத் திரித்துக் கூறுகிற வகையில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்கிற திரைப்படம் தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் மூலம், மதத் துவேஷத்தை வளர்த்து மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடுவதே பாஜகவின் நோக்கமாகும். இந்த நோக்கம் நிறைவேற, வகுப்புவாத சக்திகள் சமூக ஊடகங்களில் பண்டிட்டுகள் குறித்து ஆதாரமற்ற கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக காஷ்மீரை இந்தியாவோடு இணைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவே பண்டிட் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதை எவரும் மறந்திட இயலாது. அரைகுறையான உண்மைகளையும், ஆதாரமற்ற கட்டுக் கதைகளையும் ஒருதலைபட்சமாகக் காட்சிப்படுத்தி இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பை வளர்க்கும் கொடூர நோக்கம் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம்தான் தி காஷ்மீர் பைல்ஸ் என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!