பிரதமர் மோடி போல் உயர் பதவிகளில் அமர என்ன செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பத்தில் பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாஜக கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து விலகியது. இதன் காரணமாக உடனடியாக 12 ஆயிரம் பதவியிடங்களுக்கு வேட்பாளர்களை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை திறம்பட எதிர் கொண்ட அண்ணாமலை தமிழகம் முழுவதும் வேட்பாளர்களை போட்டியிட வைத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார். வாக்கு சதவிகிதத்தில் தமிழகத்தில் 3 வது பெரிய கட்சியாக பாஜகவை உருவாக்கியுள்ளார். இந்தநிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்களை சந்தித்து அறிவுரைகளை அண்ணாமலை கூறிவருகிறார்.
மகளிர் தினத்தையொட்டி மதுரை சௌராஷ்ட்ரா மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது மாணவிகளின் கேள்விக்கு பதில் அளித்தார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்கள் மொபைல் மூலமாகவோ, கணிணி வழியாகவோ சமூக வலைதளத்தோடு தொடர்பில் இருப்பதாக கூறினார். எனவே வாட்ஸ் -அப் போன்ற தளங்களில் கிசு கிசுக்களை பேசுவதை விட்டு நல்ல நோக்கத்தோடு பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை படித்துள்ளதாக தெரிவித்த அண்ணாமலை 12 ஆயிரம் புத்தகங்களை சேமித்து வைத்துள்ளதாக கூறினார். தன்னுடன் எப்போதும் இரண்டு புத்தகங்கள் இருக்கும் என கூறிய அண்ணாமலை பிரதமர் மோடி போல் பெரிய பதவிகளில் அமர வேண்டும் என்றால் அதிக அளவிலான புத்தகங்களை படிக்க வேண்டும் என மாணவர்களை கேட்டுக்கொண்டார். அதிலும் வரலாறு அரசியல் தொடர்பான புத்தகங்களை மாணவர்கள் வாசிக்க வேண்டும் என ஆலோசனை கூறினார்.
சிறு வயதில் தனக்கு சரியாகப் பேச வராது என தெரிவித்த அண்ணாமலை தடுமாறித்தான் பேசி வந்ததாக கூறினார். இதனை அறிந்த தனது ஆசிரியர்களில் ஒருவரான புனிதா என்பவர் தன் குறையைக் கண்டறிந்து, பள்ளியில் வழிபாட்டு நேரத்தில் மாணவர்கள் முன்னிலையில் செய்தித்தாள்களைப் படிக்க வைத்து ஆர்வமூட்டியதாக கூறினார். அந்தப் பயற்சியின் மூலமாகத்தான் தன்னால் சரியாகப் பேச முடிந்ததாக அண்ணாமலை தெரிவித்தார்.