
`தமிழக மின்சார வாரியம் 4,442 கோடி ரூபாய் மதிப்பிலான மின் திட்ட ஒப்பந்தத்தை அனைத்து விதிகளையும் மீறி நஷ்டத்தில் இயங்கும் பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு கடந்த வாரம் வழங்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிருந்தார். மேலும் இந்த நிறுவனம் திமுகவுக்கு வேண்டிய நிறுவனம் எனவும் குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து உடனடியாக நேற்று கருத்து தெரிவித்த மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பி.ஜி.ஆர் நிறுவனத்தில் கோபாலபுரம் நிதி முதலீடு செய்துள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை அவர் சொன்னார் என்பதை 24 மணி நேரத்துக்குள் அண்ணாமலை தெரிவிக்க வேண்டும் என கூறினார். இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் பல்வேறு நிகழ்ச்சியல் கலந்து கொள்ள மதுரை சென்றிருந்த அண்ணாமலை இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து மின் வாரிய முறைகேடு தொடர்பாக விளக்கம் அளித்தார். அதில் பிஜிஆர் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கியது தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் பிஜிஆர் ஒப்பந்த முறைகேடு குறித்து தமிழக முதல்வருக்கும், செபிக்கும் கடிதம் அனுப்ப இருப்பதாக தெரிவித்தார். மின்வாரியத்தில் பிஜிஆர் முறைகேடு குறித்து விசாரணை நடத்தினால் திமுக அரசை வெளிப்படையான அரசு என ஒத்துக்கொள்வதாகவும் கூறினார். பிஜிஆர் நிறுவனத்தை கருப்பு பட்டியலில் கடந்த அதிமுக அரசு சேர்த்திருக்க வேண்டும் என குறிப்பிட்டவர் ஆனால் இதை அதிமுக அரசு செய்யவில்லை என கூறினார். இதனை திமுக அரசாவது செய்திருக்க வேண்டும் என தெரிவித்தார். மின் வாரிய ஊழல் மட்டும் இல்லாமல் அனைத்து ஊழல் தொடர்பாகவும் முதலமைச்சருக்கு தெரிவிப்போம் என கூறிய அண்ணாமலை இது தங்களது கடமை என தெரிவித்தார்.
மின்வாரிய முறைகேடு தொடர்பாக புகார் அளித்தால் மிரட்டப்படுவதாக தெரிவித்த அண்ணாமலை எனக்கு கெடு விதிக்க அமைச்சர் செந்தில் பாலாஜி என்ன பிரம்மாவா என கேள்வி எழுப்பினார். வழக்கு தொடர்ந்தாலும், கைது செய்தாலும் அது தொடர்பாக தனக்கு கவலையில்லையென்றும் தெரிவித்தார். கைது நடவடிக்கைக்கு காத்திருப்பதாக தெரிவித்தவர் சிறைக்கு சென்று வந்த பின்பும் தொடர்ந்து திமுகவின் ஊழல்களை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பேன் என கூறினார்.