பெரியாருக்கு சிலை என்பது அபத்தம்! கொந்தளிக்கும் பினாங்கு துணை முதல்வர்..

By Ezhilarasan BabuFirst Published Sep 17, 2021, 9:27 AM IST
Highlights

வள்ளுவரை விட ஒரு சில அடிகள் உயரமாக பெரியாருக்கு சிலை அமைப்போம் என கிளம்பியுள்ளது முழுவதும் மூடத்தனமான செயல். 
பெரியார் மறைந்தவுடன், அவரின் பகுத்தறிவு கொள்கைகளும் மறைந்ததாகவே புரிந்துக்கொள்ள வேண்டும். அவரின் பெயர் இப்பொழுது அரசியல் நோக்கங்களுக்காகவே பயன்படுகிறது. 

பெரியாருக்கு சிலை என்பது அபத்தம்!தந்தை பெரியார் இன்று உயிரோடு இருந்தால், திருச்சியில் 135 அடியில் எழுப்பப்பட போவதாக சொல்லப்படும் தனது சிலைக்கு அனுமதி கொடுப்பாரா என தெரியவில்லை.பெரியார் அல்லது ஈவேரா, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் ஒருவர்.தமிழ்நாட்டில் சமூக மறுமலர்ச்சியை முன்னெடுக்க அவர் தோற்றுவித்தது திராவிடர் கழகம். பிராமண ஆதிக்கம், சாதிய அத்துமீறல்கள், ஆலயத்துக்குள் நுழைய தடை, தொழில் வாய்ப்புகளில் மறுப்பு என சாதியால் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது திணிக்கப்பட்ட அட்டூழியங்களையும், பெண் அடிமைத்தனத்தையும்கடுமையாக எதிர்த்தவர் பெரியார். தனது போராட்ட வாழ்க்கை முழுதுமாய், பகுத்தறிவை மட்டுமே முன்னிறுத்தி மூட நம்பிக்கைகள் புறந்தள்ளி, ஆணதிக்க திணிப்பு முறையயும் உடைக்க தொடர்ந்து செயல்பட்டவர் பெரியார். 

தனது பகுத்தறிவு கொள்கைகளை வெறும் பேச்சளவில் மட்டும் இல்லாமல், மதம் சார்ந்ததோ, இல்லையோ, அனைத்து மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் கடுமையான செயற்பாடுகளை முன்னெடுத்தார் அவர்.பெரியார் ஒன்றும் கடுமையான இறை மறுப்பாளர் அல்ல; அவர இறை நம்பிக்கையின் பெயரில் நடக்கும் அநீதிகளை ஏற்காதவர், பகுத்தறிவாளர்.பெரியார், வேதிய மதத்தை அடிப்படையாக கொண்டு பிராமணர்கள் சமூக, அரசியலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை கடுமையாக எதிர்த்தார். பல்லாண்டு காலம் புரைந்தோடியிருக்கும் வழக்கங்களை மாற்றுவதும், மறுப்பதும் அவ்வளவு இலகுவான காரியம் இல்லை.பகுத்தறிவு சிந்தனைகளை பெரியார் கடுமையான போக்கில் முன்னெடுத்ததுக்கு காரணம், பிராமணர் அமைப்புகள், அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அரசியல் அமைப்புகள் மூலம் ஏற்பட்ட எதிர்ப்பை, அவர்களை விட கடுமையாக எதிர்த்தால்தான் அவர்களுக்கு புரிய வைக்க முடியும் என்பதால்தான். 

எனது புரிதல் சரியானது என்றால், தனது புகழை விட்டுச்செல்ல வேண்டுமென்ற நோக்கமில்லாத, தனிமனித துதிபாடல்களை விரும்பாத ஒருவருக்கு, அவரது நினைவாக சிலை வைக்க வேண்டும் என்பதே அவரது கொள்கைகளை குழித்தோண்டி புதைக்கும் செயல் போன்றது. பகுத்தறிவாளர் ஒருவருக்கு, அவரது நினைவாக சிலை எழுப்புகிறோம் என்பது தலைகீழான செயலாகும். அவரது வாழ்வு முழுதும் பேசிய கொள்கைகளுக்கு முற்றும் மாறானது. ஆனால், திராவிட கழகத்தை வரிசு போல சொந்தம் கொண்டாடும் ஒருவர், அவ்வமைப்புக்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒருவர், தமிழர் மண்ணில், பெரியாருக்கு 135 அடியில் சிலை வைக்கிறேன் என புறப்பட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது. தமிழ்மண்ணில்தான் ஏற்றத்தாழ்வுகளையும், சாதிய ஒடுக்குமுறைகளையும் எதிர்த்தும், மூடநம்பிக்கையை முழுதாக புறந்தள்ள போராடினார் பெரியார்.  ஆனால், மூடத்தனத்தை ஒதுக்க சொன்ன பெரியாருக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து சிலை வைக்கிறேன் என்பது பகுத்தறிவான செயலா? 

பெரியாருடைய சீடர் என கூறிக்கொள்ளும் வீரமணி முழுவதுமாய் திராவிட கழகத்தை பெரியாரிடமிருந்து சொந்தம் கொண்டாடியுள்ளார். அந்த அமைப்பை வீரமணியும் அவரது குடும்பமும்தான் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டேன்.தமிழ்நாட்டில், சமூக நீதிக்காகவும், பகுத்தறிவு முன்னெடுப்பும் மிகுந்த காலம் போய், மாற்றங்களை சில திராவிட கட்சிகளின் அரசியல்வாதிகள் தங்களது அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்தி கொண்டதுதான் மிச்சம். திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான ஸ்டாலின், 135 அடி பெரியார் சிலை நிர்மாணிப்புக்கு அனுமதி அளித்துள்ளார். தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், அரசியல் காரணங்களுக்காக அந்த அனுமதியை தந்திருக்கலாம். என்னை பொறுத்தவரை, பகுத்தறிவு இயக்கம் என்பது, பெரியார் மறைவுடன் தமிழ்நாட்டில் நின்றுவிட்டது. பெரியார் அரசியல் வேண்டாம் என மறுத்தார். அண்ணாவும், கருணாநிதியுமே அரசியல் வேண்டுமென பிரிந்து வந்து திராவிட முன்னேற்ற கழகத்தை அமைத்து அரசியலுக்குள் நுழைந்தனர். 

தனது வாழ்நாள் முழுவதும், ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார சுதந்திரத்துக்காக மட்டுமே போராடியவர் பெரியார். 
பின்னாளில் சில அரசியல் தலைவர்கள், தமிழ்நாட்டில் பெரியாரின் கொள்கைகளை சொல்லி, தனக்கும், குடும்பத்துக்குமான இலாபத்தை குவிப்பதில் கவனம் செலுத்தினர் என்பதுதான் உண்மை. அப்படியிருந்தாலும், பெரியாரும் அவர்கண்ட திராவிட கழகமும் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தாக்கம் என்பது என்றும் மாறாது என்பதும் உண்மை. அந்த சமூகநீதி கொள்கைகளின் தாக்கம்தான், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், சமூகவியலில் முன்னுக்கு வர காரணமாக இருந்தது. 
பெரியாரால் சாதியை ஒழிக்க முடியவில்லை என்றாலும், பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் தங்களுக்கான அரசியல் நிர்ணய உரிமையை உணர வைத்த, சாதிய அடக்குமுறைகளை களைய வைத்துள்ளது. 

இன்று, தமிழ்நாட்டின் அரசுத்துறைகளின் உயரிய பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் பெரியாரின் போராட்டமே அன்றி, அவருக்கு பின் வந்த சில சுயநல அரசியல்வாதிகளும், அல்லது பெரியாரின் பெயரை பயன்படுத்தி தனது சுயநலத்தையும், குடும்பநலத்தையும் பெருக்கும் சிலரும் அல்ல.சில அடைமொழிகளோடு வளம் வரும் வீரமணி, பெரியாரின் பெயருக்கு நற்பெயர் ஏற்படுத்தினாரோ இல்லையோ, இந்த சிலை நிறுவ போகிறேன் என புறப்பட்டு பெரியாரின் பெயருக்கு களங்கம் எற்படுத்தியுள்ளார் என்பது மட்டும் உண்மை. 135 அடியில் பெரியார் சிலை நிறுவ போகிறோம் என்பது, 133 அடியில் நிறுவப்பட்டிருக்கும் திருவள்ளுவரின் சிலைக்கு போட்டியாகவா? இருபது ஆண்டுகளுக்கு முன்பு குமரி மாவட்டத்தில் நிறுவப்பட்டது திருவள்ளுவர் சிலை.பெரியாருக்கு சிலை வைக்கிறோம் என கிளம்பியதே தவறு. பெரியாரின் சுயமாரியதை, பகுத்தறிவு கொள்கைக்கு முற்றிலும் எதிரானதுதான். 

இதுப்போன்ற தனிமனித துதிபாடல்களும், அதன்வழி அமைக்கப்படும் சிலை போன்ற கட்டமைப்புகளும். வள்ளுவரின் எழுத்துக்கள் உலகத்துக்கு பொதுவானவை. அவரின் நினைவாக இருக்கும் சிலை அந்த எழுத்துக்களின் சான்றாக உயர்ந்து நிற்கின்றது. அப்படியிருக்க திருவள்ளுவரை விட ஒரு சில அடிகள் உயரத்தில் பெரியார் சிலையை அமைப்போம் என்பது என்ன நோக்கத்துக்காக? பெரியார் பிறப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து வாழ்ந்தவர் வள்ளுவர். பெரியாரே வள்ளுவரின் கருத்துகளை கொண்டாடியுள்ளார்.இந்த நிலையில், பெரியாரையும், வள்ளுவரையும் ஒப்பிட்டு, வள்ளுவரை விட ஒரு சில அடிகள் உயரமாக பெரியாருக்கு சிலை அமைப்போம் என கிளம்பியுள்ளது முழுவதும் மூடத்தனமான செயல். பெரியார் மறைந்தவுடன், அவரின் பகுத்தறிவு கொள்கைகளும் மறைந்ததாகவே புரிந்துக்கொள்ள வேண்டும். அவரின் பெயர் இப்பொழுது அரசியல் நோக்கங்களுக்காகவே பயன்படுகிறது. சிலைக்கு அனுமதி வழங்கியதில் தமிழர்களை அவமானப்படுத்தும் விதமாக திமுக நடந்து கொள்கிறது என்றுதான பார்க்க முடிகிறது. 

அப்பாவி தமிழர்களை சிங்கள பேரினவாத தாக்குதல்களில் இருந்த காப்பாற்றாமல் இருந்ததற்காக திராவிட கட்சிகள் அவமானப்பட வேண்டும். அப்பொழுது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி, புதுடெல்லியுடனான மாநில உறவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை, மடிந்துக்கொண்டிருந்த தமிழர்களின் உயிருக்கு கொடுக்கவில்லை என்றுதான் உலகம் பார்த்தது; இனியும் பார்க்கும். 
அந்த ஒரு காரணத்துக்காகவே, உலக தமிழர்களுக்கான தலைவர் என்று கருணாநிதி ஒரு போதும் சித்தரிக்கப்பட மாட்டார். உலகத்தமிழர்களுக்கு என்றென்றும் ஈடில்லா தலைவர், தனது மக்களின் போராட்டத்துக்காக, தனது குடும்பத்தையே அர்ப்பணித்த அந்த ஒரு தலைவர்தான் என்றும் மக்கள் மனதில் நீடிப்பார் என பினாங்கு மாநில துணை முதல்வர். பேராசிரியர் இராமசாமி தெரிவித்துள்ளார். 

 

click me!