அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட வழக்கை மீண்டும் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து ஜூலை மாதம் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை எம்.பி. எம்எல்ஏக்கள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
அப்போது செந்தில் பாலாஜி ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சிறப்பு நீதிமன்றமும் யார் ஜாமின் மனுவை விசாரிப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து ஜாமின் மனுவை விசாரிப்பது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் உத்தரவை தேவைப்படுவதாகவும் கூறப்பட்டது.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம் மறுத்திருந்த நிலையில், ஜாமின் மனு மீதான விசாரணை நடத்த எந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்பது குறித்து முடிவெடுக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுரேஷ் குமார், குமரேஷ் பாபு அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதிகளிடம் செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை இரண்டு நீதிமன்றங்களும் விசாரிக்க மறுத்தது தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டப்படி மத்திய அரசால் முதன்மை அமர்வு நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமாக அறிவித்த அரசாணை மத்திய அரசு சட்டத்துக்கு மேலானது அல்ல
எனவே அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க வேண்டும். சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட வழக்கை மீண்டும் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட வேண்டும். மேலும் வழக்கை மாற்றிய உத்தரவை திரும்பப் பெற முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதே தவறு என குறிப்பிட்டனர். அனைத்து கோப்புகளையும் சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கே மாற்ற வேண்டும் என கூறினர். எனவே செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.