
ஒட்டுமொத்த தேசமும் ஒரு தினுசாக பார்க்கும் வண்ணம்தான் தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதில் இரண்டாவது கருத்தே இல்லை.
இந்நிலையில், இந்த மாநிலத்துக்கு இப்போது கிடைத்திருக்கும் கவர்னர் மக்கள் மனதில் நம்பிக்கை நாற்றை நடுகிறார்! ஆனால் அதை வேண்டுமென்றே புரிந்து கொள்ளாமல் தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
அதிலும் இன்றைக்கு சட்டசபையில் கவர்னர் கெஞ்ச, கெஞ்ச தி.மு.க. வெளியேறியது ஸ்டாலின் செய்த மிகப்பெரிய பிழை! என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
மிக கடுமையான அரசியல் பரபரப்புகளுக்கு இடையில் தமிழக சட்டமன்றம் இன்று கூடியிருக்கிறது. சபைக்கு வந்த ஆளுநர், தனது உரையை வாசித்தார். ஆனால் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினரும், பின் காங்கிரஸாரும் எழுந்து எதிர்ப்பு கூச்சலிட துவங்கினர்.
ஆளுநர் மிகவும் மனம் நொந்தவராய், பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டு “மரியாதைக்குறிய சபை உறுப்பினர்களே. தயவு செய்து உட்காருங்க. விவாதத்தின் போது உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அப்போ நிறைய கேள்விகள் கேட்கலாம். இப்போ உட்காருங்க! ப்ளீஸ்! ப்ளீஸ்!’ என்று கெஞ்சிப் பார்த்தார். வயதான மனிதரான ஆளுநர் பரிதவிப்பான குரலில் ‘ப்ளீஸ்! ப்ளீஸ்!’ என கெஞ்சுவதை பார்க்கவே சங்கடமாக இருந்தது.
ஆனால் இதற்கு மசிந்து கொடுக்காத ஸ்டாலின் தன் கட்சியினரை அழைத்துக் கொண்டு வெளியேறிவிட்டார். இது கவர்னரின் மனதை பெரிதும் பாதித்துவிட்டது.
வெளியே வந்த ஸ்டாலின் ‘தேர்தல் அமைப்பு சட்டத்தின் விதிகளை மீறி மைனாரிட்டியாக இருக்கும் இந்த அரசை செயல்பட அனுமதிக்கிறார்கள். அரசு எழுதி கொடுத்திருக்கும் அறிக்கையை கொஞ்சமும் கவலையில்லாமல் வாசிக்கிறார் கவர்னர். இதை கண்டித்தே வெளிநடப்பு செய்தோம்.’ என்றார்.
இருந்தாலும் கூட அவ்வளவு பெரிய மனிதர் தன் கெத்தை விட்டு, முந்தைய கவர்னர்கள் போல் ‘போனால் போங்கள்’ என்று கண்டு கொள்ளாதவராய் கெஞ்சியும் கூட ஸ்டாலின் மனமிறங்காமலிருந்தது ஒரு பிழையே! என்கின்றனர் விமர்சகர்கள்.