
ஜெயலலிதா போல் சர்வாதிகாரம் வேண்டும் என கட்சியின் செயற்குழுவில் கேட்டார் ஸ்டாலின். ஜெயலலிதா சர்வாதிகாரம் செய்தார்! ஆனால் அதிரடியாய் செயல்பட்டார். ஆனால் ஸ்டாலினிடம் அதிரடி செயல்பாடுகள் இல்லாத நிலையே கட்சியின் சரிவுக்கு காரணமென ஆதங்கப்பட்டிருக்கின்றனர் தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள்.
தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று அறிவாலயத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மா.செ.க்கள் மனம் திறந்து பேசியிருக்கின்றனர். பொதுவாக ‘தளபதி! தளபதி!’ என வாழ்த்து பா உடன் முடிவடையும் கூட்டம் நேற்று அப்படியானதாக இல்லையாம்.
சில மாவட்ட செயலாளர்கள் தைரியமாக இறங்கியடித்ததாக தகவல்கள் கசிகின்றன. ஸ்டாலின் தவறாக நினைத்தாலும் பரவாயில்லை, இப்போது விட்டால் இனி எப்போதும் பேசவும் முடியாது, கட்சியை காப்பாற்றவும் முடியாது என பேசியிருக்கின்றனர்.
பல மாவட்ட செயலாளர்களின் கோபம் எப்போதும் ஸ்டாலினை சுற்றியே நிற்கும் நான்கைந்து நபர்கள் மீதே இருக்கிறது. குறிப்பாக கருணாநிதியை ஒட்டியே இருந்து ராஜாவின் நிழலாக வாழ்க்கை நடத்திய துரைமுருகன் இப்போது ஸ்டாலினிடம் அதேபோல் நடந்து கொள்வதை இடித்துக் காட்டியிருக்கின்றனர்.
மாவட்ட செயலாளர்கள் பேசியதன் ஹைலைட் பாயிண்டுகள் இதோ...
* தினகரன் தரப்பு ஓட்டுக்கு ஆறாயிரம் ரூபாய் கொடுத்ததாக பேசுகிறார்கள். ஆனால் அதற்கு மேலேதான் அவர் கொடுத்தார். நம் கட்சி சார்பாக பழைய வேட்பாளர் சிம்லா முத்துச்சோழனை நிறுத்தியிருந்தால் இவ்வளவு மோசமான தோல்வி கிடைத்திருக்காது. வேட்பாளர் சரியில்லை.
* ரோட்டுல கார்ல போகும்போது உங்க மொபைலை கவனிச்சுட்டே போயிடுறீங்க தளபதி. உங்களுக்கு வணக்கம் சொல்ற பொதுமக்கள், தொண்டர்களை நீங்க கவனிக்கிறதேயில்லை. பதில் வணக்கம் செய்யாததால ரெண்டு தரப்பும் ஆதங்கப்படுறாங்க.
* எந்த மாவட்டத்துக்கு போனாலும் உங்களை சுற்றி குறிப்பிட்ட சிலர்தான் நிற்கிறாங்க. தலைவர் காலத்தில் அவரோடு இருந்தவர்தான் இப்போ உங்க கூடவே நிற்கிறார். இது எந்த வகையில் நியாயம்? அவரையெல்லாம் தள்ளி நிறுத்துங்க தளபதி.
அந்தந்த மாவட்ட செயலாளர்களை அந்தந்த மாவட்டத்தில் உங்க கூட வெச்சுக்குங்க. அப்போதானே கீழ் நிலை நிர்வாகிகள் இன்னும் கொஞ்சம் உங்களை நெருங்க முடியும்?!
- என்று வெடித்துச் சிதறினார்களாம்.
எல்லாவற்றையும் வழக்கம்போல் உதட்டை சுழித்து, விட்டத்தைப் பார்த்து மனதில் ஏற்றிக் கொண்டாராம் ஸ்டாலின்.
துரைமுருகன் தூர நிறுத்தப்படுவாரா?