ராமதாஸ் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையேல் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் - பொறிந்து தள்ளும் தீபா...

First Published Apr 30, 2017, 5:22 PM IST
Highlights
The founder of ramathas apologized to me If not I will take legal action - deepa complaint


பெண் என்றும் பாராமல் கைபேசியில் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி விடிய விடிய பாமக தொண்டர்கள், கொலை மிரட்டல் விடுத்ததற்கு டாக்டர் ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என தீபா வலியுறுத்தி உள்ளார்.

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டுமென டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் கூறி வருகின்றனர். ராமதாஸ் அவ்வாறு கூறுவது புலியை பார்த்து எலி எக்காலம் விடுவது போல் ஆகும் என்று தீபா, அண்மையில் ஒரு அறிக்கையில் கூறி இருந்தார்.

வயது முதிர்ந்த ஒரு அரசியல் தலைவரை, அரசியலில் அரிச்சுவடி கூட தெரியாத தீபா இவ்வாறு  பேசுவது கண்டனத்திற்கு உரியது என்று, பாமக தொண்டர்கள் கொதிப்படைந்தனர்.

இதையடுத்து, பாமக தொண்டர்கள் அன்று இரவு முழுவதும், தமது  கைபேசியில் தொடர்பு கொண்டு, ஆபாச வார்த்தைகளால் திட்டியும், குறுஞ்செய்தி அனுப்பியும் மிரட்டல் விடுத்ததாக தீபா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், பெண் என்றும் பாராமல், ராமதாசின் அடியாட்கள் விடிய விடிய எனது கைப்பேசிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதையடுத்து, ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி உள்ளார்.

மேலும், அரசியல் களத்திலிருந்து நான் ஓடவேண்டும் என்று மிரட்டிப் பார்க்கிறார்கள். இதுமாதிரியான சலசலப்புக்கு எல்லாம்  நான் அஞ்சமாட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பசுமை தாயகம் என்ற பெயரில் தனது மகனை வைத்து மரம் வளர்ப்போம் என்று ஒரு அமைப்பைத் தொடங்கி, வட மாவட்டம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டிச் சாய்த்த கூட்டம் தான் டாக்டர் ராமதாஸ் கட்சி.

ஜாதி கலவரத்தை தூண்டுவதால்தான் பாமக புறக்கணிக்கப்படுகிறது என்பதை அனைவரும் அறிவார்கள்.

ஊழல் குறித்து உலகம் முழுக்க பேசும் ராமதாஸ், தனது மகன் மத்திய  அமைச்சராக இருந்தபோது முறைகேடாக நடந்து கொண்டதற்காக  நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதை மறந்து விட்டார்.

மகனை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து தமிழகம் முழுவதும் பாமக டெபாசிட் தொகை இழந்த கதையையும் அவர் மறந்து பேசுகிறார்.  .

கூட்டணி என்ற பெயரில், போயஸ் தோட்டத்திற்கும் கோபாலபுரத்திற்கும் நடையாய் நடந்து பிழைப்பு நடத்திய பாமக-வால் தனித்து நின்று அரசியல் செல்வாக்கை நிரூபிக்க முடியவில்லை.

திராவிட கட்சியின் தயவால் எம்.பி. எம்.எல்.ஏ-க்களை பெற்ற பாமக தனித்து நின்று ஒரு சீட்டு கூட வெற்றி பெற முடியாததுக்குக் காரணம் என்ன?மக்களால் நிராகரிக்கப் பட்ட அமைப்பு தான் பாமக.

அம்மாவின் அரசியல் வாரிசாக, பெரும் மக்கள் சக்தியுடன் வலம்வரும் என்னை அரசியல் களத்தில் இருந்து விரட்டவேண்டும் என்ற தீய நோக்கத்தோடு, என் அரசியல் வளர்ச்சி அபரிவிதமாக வளர்ந்து வருவதைப் பொறுக்க முடியாமல் என் கைப்பேசிக்கு ராமதாசின் கூலிப்பட்டாளம் இழிவாகப் பேசியது வருத்தம் அளிக்கிறது.

அனைத்தையும் பதிவு செய்திருக்கின்றேன். அதேபோல் ராமதாசின் அடியாட்கள் எனக்கு எழுதி அனுப்பிய குறுஞ்செய்திகளையும் பதிவு செய்துள்ளேன்.

குடும்ப பெண்ணான என்னைத் தவறாக சித்தரித்து இரவு முழுவதும், எனக்கு அவர்களின் தொண்டர்களை விட்டு கொலை மிரட்டல் விடுத்து, மிரட்டிப் பேச வைப்பது தமிழர் பண்பாடு பற்றி வாய் கிழிய பேசும் பெரியவர் ராமதாசுக்கு ஏற்ற செயலா?

கேரள பெண்களுக்காக குரல் கொடுத்தவர், என்னை இழிவாக தன் தொண்டர்களை வைத்துப் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். 

இல்லையென்றால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கத் தயார்.

கலாச்சாரம் பாதுகாக்கப்படவும், பெண்கள் சுதந்திரமாக செயல்படவும் வேண்டுமென்றால் ராமதாசை அரசியலில் இருந்து புறக்கணிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

click me!