
கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலையையடுத்து தமிழகத்தில் நடக்கும் சம்பவங்கள் திரைப்படங்களின் த்ரில்லர் காட்சியை மிஞ்சிவிடும்போல் இருக்கிறது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் ஒன்று நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ளது. இந்த எஸ்டேட்டில் காவலாளியாக வேலை பார்த்த ஓம்பகதூர் என்பவர் கடந்த 23 ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு சம்பந்தமாக கனகராஜ், சயான் ஆகியோரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் நேற்று காலை சேலம் அருகே கார் விபத்தில் உயிரிழந்தார்.
அதேபோல், சயான் என்பவரும் காரின் மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்தார். மேலும் காரில் இருந்த அவரது மனைவியும் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சயான் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கேரள போலீசார் அவரை விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரேதபரிசோதனையில் சயானின் மனைவி, குழந்தை கழுத்தில் வெட்டுகாயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் கேரளா போலீசாருக்கு சந்தேகம் எழவே அவரது மனைவி, மகள் உடல்கள் திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
காவலாளி கொலையை அடுத்து கொடநாட்டில் நடந்தது குறித்து நீலகிரி எஸ்.பி. முரளி ரம்பா விளக்கமளித்துள்ளார்.
அதில் கொடநாடு எஸ்டேட்டில் அதிக பணம் இருப்பதாகவும் அதை திருடவே கொள்ளையர்கள் கனகராஜ் வகுத்து கொடுத்த திட்டப்படி கொள்ளையடிக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால் அங்கு பணம் இல்லாததால் ஜெயலலிதாவின் கைக்கடிகாரத்தை திருடி சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதில் முக்கியமாக யோசிக்க வேண்டியது என்னவென்றால் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதிய கனகராஜும், சயானும் ஒரே நாளில் விபத்தில் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில், போததகுறைக்கு முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் கார் ஓட்டுனரும் இன்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இதற்கும் காவலாளி கொலை வழக்கிற்கும் எதோ சம்பந்தம் இருக்கிகுமோ என்ற சந்தேகம் கூட வலுக்க ஆரம்பிக்கிறது.
இதற்கு காரணம் ஜெயலலிதாவின் ஆவி அப்ளை வாங்குகிறதா என்ற மர்ம பேச்சு கூட மக்களிடையே பரவிக்கொண்டு வருகிறது.
காவலாளி கொலை குறித்து முழுமையான விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலையையடுத்து தமிழகத்தில் நடக்கும் சம்பவங்கள் திரைப்படங்களின் த்ரில்லர் காட்சியை மிஞ்சிவிடும்போல் இருக்கிறது என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நக்கல் அடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதற்காக காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்? அங்கு கொள்ளையடிக்கப்பட்டது போலீசார் கூறுவது போல் கைக்கடிகாரங்கள் மட்டும்தானா?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் இந்த வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி என்றால், அவர் எப்படி திடீர் விபத்தில் சிக்கி மரணமடைந்தார்?
அதேநேரத்தில் அவருக்கு உதவிகரமாக இருந்ததாக கூறப்படும் சயன் என்ற கூட்டாளியும் எப்படி விபத்தில் சிக்கினார் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு இதுவரை காவல்துறை முறையான விளக்கத்தை கூற முன்வர வில்லை.
கொடநாட்டில் கொள்ளையடிக்க முயன்றது ஏதோ வெறும் கைக் கடிகாரங்களுக்காக என்று போலீசார் கூறுவதை நம்புவதற்கு இடமில்லை.
கைக்கடி காரத்தை எடுக்க வந்தவர்கள் ஏன் காவலாளியை கொல்ல வேண்டும்? அதே கொள்ளையில் எடுத்துச்சென்ற பளிங்கு கற்களை பத்திரமாக வைத்திருந்த கொள்ளையர்கள் ஏன் கைக்கடி காரங்களை தூக்கி ஆற்றில் வீசினார்கள் என்பதெல்லாம் புரியாத புதிர்களாக இருக்கின்றன.
ஆகவே கொடநாடு காவலாளி கொலை, கைக்கடிகாரக் கொள்ளை, ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மற்றும் அவரது கூட்டாளி சயன் விபத்து ஆகியவற்றை ஒட்டு மொத்தமாக இணைத்து விசாரிக்க வேண்டும்.
கொடநாடு கொலை விவகாரத்தில் நடந்தது என்ன என்ற உண்மைத் தகவல்களை வெளிப்படையாக அறிவித்து, சம்பந்தப்பட்ட உண்மைக் குற்றவாளிகள் யாரேனும் “மீண்டும் ஒரு விபத்தில் சிக்கி விடாமல்” தடுத்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.