
இரு அணிகள் இணைவது தொடர்பான பிரச்சனையில் ஓபிஎஸ் அணியினர் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவது ஏன் என அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா தலைமையில் ஓர் அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியும் இரண்டாக அதிமுக பிரிந்து செயல்படத் தொடங்கியது.
இந்நிலையில் சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தினரை கட்சியைவிட்டு நீக்கினால் இரு அணிகளும் இணைய வாய்ப்பு இருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்தார். இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள் ஒன்றுகூடி சசிகலா குடும்பத்தினரை கட்சியைவிட்டு ஒதுக்கிவைப்பதாக தெரிவித்தனர்.
இதின் முதல் கட்டமாக சென்னை ராயப் பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் உள்ள சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் பேனர்கள் அகற்றப்பட்டன.
இரு தரப்பினரும் பேச்சு வார்த்தை நடத்தும் வகையில் இரு குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் பேச்சுவார்த்தை தொடங்காத நிலையில் இரு தரப்பினருமே எதிரெதிர் கருத்துக்களை பேசி வருவதால் இரு அணிகள் இணைப்பில் சிக்கல் ஏட்றபட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், ஓபிஎஸ் அணியினர் முரண்பட்ட கருத்துக்களை கூறி வருவதாக குற்றம்சாட்டினார்.
நிபந்தனைகள் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என ஓபிஎஸ் தரப்பினருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
ஓபிஎஸ் அணியின் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் ஒரு கருத்தை சொல்கிறார், பொன்னையன் ஒரு கருத்தை கூறுகிறார்…செம்மலை ஒரு கருத்தை கூறுகிறார்.. ஒவ்வொருவரும் முரண்பட்ட கருத்தை பேசி வருவதாக குற்றம்சாட்டிய ஜெயகுமார்,
முரண்பாடுகள் தீர்ந்தால்தான் பேச்சவார்த்தை நடைபெறும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்