
அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பதில், பன்னீர் அணியை சேர்ந்த சிலர் இடையூறாக இருந்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை அப்படியே ஏற்கவும் முடியாது, நிராகரிக்கவும் முடியாது.
பன்னீர் அணியில், அமைச்சர் பதவியை துறந்து வந்த மாபா பாண்டியராஜன் மற்றும் மக்கள் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து, கூவத்தூர் கவனிப்புகளை எல்லாம் துறந்த எம்.எல்.ஏ க்கள் பலர் உள்ளனர்.
அதேபோல் முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் உயர் பொறுப்பில் ஏற்கனவே இருந்தவர்கள், சசிகலாவால் ஓரம் கட்டப்பட்டவர்களும் பன்னீர் அணியில் உள்ளனர். இவர்கள் தங்களது சொந்த பணத்தையும் செலவு செய்து வருகின்றனர்.
இந்த இருதரப்பினரையும் திருப்தி படுத்த வேண்டும் என்றால், முதல்வர், பொது செயலாளர் ஆகிய இரண்டு பதவிகளும் பன்னீருக்கு கிடைத்தால் மட்டுமே சாத்தியம்.
மேலும், தம்மை நம்பி வந்தவர்களை கரை சேர்க்க வேண்டிய பொறுப்பும் பன்னீருக்கு இருப்பதால், அவர் தம்முடன் இருப்பவர்களின் மனது நோகாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்.
அதே சமயம், தங்களுக்கு எந்தவிதமான பதவிகளும் இல்லாமல், அணிகளை இணைப்பதில் எந்த பயனும் இல்லை என்பதில், பன்னீரின் ஆதரவாளர்கள் உறுதியாக இருக்கின்றனர்.
மறுபக்கம், இரட்டை இலை சின்னத்தை பெறவேண்டும் ஒரே நோக்கத்திற்காக, பன்னீரை இணைக்க வேண்டும் என்று எடப்பாடி அணி விரும்புகிறது.
மற்றபடி அவருக்கோ, அவரது ஆதரவாளர்களுக்கோ, கட்சியிலும், ஆட்சியிலும் முக்கியத்துவம் கொடுப்பதில் எல்லாம் அவர்களுக்கு விருப்பம் இல்லை.
அதனால், தொடர்ந்து யோசித்து வந்து பன்னீர்செல்வம், முதல்வர், பொது செயலாளர் ஆகிய இரண்டு பொறுப்பையும் கொடுத்தால் இணையலாம். அல்லது, தொண்டர்கள் மத்தியில் தமக்கு இருக்கும் ஆதரவை, ஊர் ஊராக சென்று மேலும் வலுவாக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்.
சசிகலாவை எதிர்த்து போர்க்கொடி பிடித்த மறுநாளே. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத அடிமட்ட தொண்டர்கள் பலரும் பன்னீர் பக்கம் வந்து விட்டதால், அந்த ஆதரவை பெருக்குவதில் அவருக்கு சிரமம் இருக்காது என்றே கூறப்படுகிறது.
ஆனாலும், அடுத்த தேர்தல் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஒரு பக்கம் இருந்தாலும், அதுவரை அரசியல் சூழ்நிலைகளில் பெரிய மாறுதல்களும் நிகழாமல் இருக்க வேண்டியதும் அவசியம்.