
இரட்டை இலை சின்னத்திற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அடுத்த கட்ட திருப்பமாக ஹவாலா இடைத்தரகர் நரேஷிடம் 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இரட்டை இலை லஞ்ச வழக்கில் அடுத்தடுத்து அதிரடித் திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. சென்னையில் மூன்று நாட்கள் விசாரணைக்குப் பின்னர் டிடிவி.தினகரன் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவை போலீசார் நேற்றிரவு டெல்லி அழைத்துச் சென்றனர்.
சென்னையில் நடைபெற்ற விசாரணையின் போது மூத்த அமைச்சர் ஒருவரின் உதவியுடன் 10 கோடி ரூபாய் பணம் டெல்லிக்கு கைமாறியது தொடர்பான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையே சுகேஷ் சந்திரசேகரருக்கும் டிடிவி.தினகரனுக்கும் இடையே ஹவாலா ஏஜெண்டாக செயல்பட்டவர் நரேஷ். நரேஷ் மூலமாகவே சுகேஷுக்கு 1.50 கோடி ரூபாய் பணம் கைமாறியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்த ஆதாரங்களைத் திரட்டிய அதிகாரிகள் மலேசியாவில் இருந்து டெல்லி திரும்பிய போது விமான நிலையத்தில் வைத்து அவரைக் கைது செய்தனர்.
இதற்கிடையே தற்போது நரேஷிடம் இருந்து 50 லட்சம் ரூபாயை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சுகேஷிடம் அளிப்பதற்காக இப்பணம் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.