
செயல்தலைவரான ஸ்டாலின் அதிரடியாக செயல்படாமல் உள்ளார் என்று வருத்தத்தில் உள்ள தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், லேட்டஸ்டாக துரைமுருகன் மீது ஆத்திரமடைந்துள்ளது அறிவாலய வட்டாரத்திற்கு ஷாக் கொடுத்துள்ளது.
தி.மு.க. மா.செ.க்களின் கூட்டம் கடந்த 28_ம் தேதியன்று சென்னையில் நடந்தது. இதில் மேடையிலும், பின் நிகழ்வு முடிந்த பின் வந்திருந்த மா.செ.க்கள் சிலரது மத்தியிலுமாக துரைமுருகன் ஏக துள்ளலுடன் பேசினாராம். ‘சில மாவட்ட செயலாளர்கள் மேலே புகார்கள் வந்துச்சு. அதை விசாரிச்சோம், உண்மைன்னு புரிஞ்சுச்சு. கூடிய சீக்கிரம் தளபதி அவங்க மேலே நடவடிக்கை எடுப்பார். ஆனால் அது கட்சியோட வளர்ச்சிக்குதான் அப்படிங்கிறதை புரிஞ்சுகிட்டு ஒத்துழைப்பு கொடுங்கப்பா.’ என்று வாழைப்பழத்தில் கடப்பாரையை ஏற்றினாராம்.
மறுநாள் தத்தமது மாவட்டம் திரும்பிய பல செயலாளர்கள் தங்களுக்குள்ளே போன் போட்டு நடந்த நிகழ்ச்சிகளை பற்றி ஆதங்கத்தோடு அசைபோட்டனராம். அப்போது துரைமுருகனின் அதிகார தோரணையை பற்றி கடுமையாக விமர்சித்திருக்கின்றனர். ’தளபதி செருப்பால அடிச்சா கூட தாங்கிக்கலாம். அவருக்கு அந்த உரிமையும், தகுதியும் இருக்குது. நடமாடும் தலைவராகதான் அவரை நாம பார்க்கிறோம்.
ஆனால் இவரு யாரு நம்மை மிரட்ட, உருட்ட? பேராசிரியரோ அல்லது ஆற்காட்டாரோ இப்படி பேசினாலும் கூட பொறுத்துக்கலாம். காரணம் கழகத்துக்காக உயிரை தவிர எல்லாவற்றையும் இழந்து உழைச்சவங்க அவங்க.
ஆனால் துரைமுருகன் என்ன பண்ணினார்? ஏதோ அவைப்புலவர் மாதிரி தலைவரின் நிழலாகவே வலம் வந்து, ஹாஸ்யம் பேசி அவரை குஷிப்படுத்துறதுதானே முக்கிய வேலையா வெச்சிருந்தார். எத்தனையோ முறை தலைவர் அவரை விலக்கி வைத்தும் கூட கண்ணீரை காட்டித்தானே மறுபடியும் கோபாலபுர வீட்டில் ஐக்கியமானார்.
சிறப்பாக செயல்படும் இளைஞர்களுக்கு கட்சியில் வளர வழிவிடுங்கள் அப்படின்னு சீனியர் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை சொல்றாரு .
ஆனா கழகம் ஆட்சி அமையுறப்பவெல்லாம் பொதுப்பணி துறை தனக்கேதான்னு பட்டா எழுதி வாங்கி உட்கார்றவர்தானே! வேலூர் மாவட்டத்துல நம்ம கட்சியில எத்தனை இளைஞர்களை இவர் வளர்த்திருக்கிறாராம்? தலைவரின் நிழலாக ஒட்டியே இருந்த துரைமுருகன் தனக்கு தோதுப்படாத கழக நிர்வாகிகளை தலைவரை நெருங்கவே விடலை. இதனால் வெறுத்து சோர்ந்த நிர்வாகிகள் பல பேர்.
தலைவரே தனக்கு எல்லாமுன்னு சொல்லிட்டு இருந்தவர், அவர் இயங்க முடியாமல் தளர்ந்ததும் தளபதி பக்கம் தாவிட்டார். ‘தம்பி வா! தளபதி வா!’ன்னு மேடையிலே கண்ணீர் விட்டு இந்தப்பக்கம் ஒட்டிக்கிட்டார். தலைவரின் நிழலாக எப்படி ஒட்டியிருந்தாரோ அதேமாதிரி இப்போ தளபதியின் நிழலாகவும் ஒட்டியிருக்கிறார்.
துரைமுருகனை தன் பக்கத்திலேயே வெச்சுக்கிறது தளபதியின் விருப்பம். அதுல நாம தலையிட முடியாது, தலையிட கூடாது. ஆனால் தனது மவுத் பீஸாக துரைமுருகனை பேசவிட்டு வேடிக்கை பார்க்குறது தளபதிக்கு அழகல்ல. தான் பேசவேண்டிய சில குத்தல் விஷயங்களை துரைமுருகனுக்கு எடுத்துக் கொடுத்து அவரை பேசவிட்டு கட்சியினரை எச்சரிக்கும் டெக்னிக்கை தலைவர் சில நேரங்கள்ள செய்வார்.
ஆனா கடைசியா சமீப வருஷங்கள்ள அதை மாத்திக்கிட்டார் தலைவர். அதனால தளபதியும் இந்த விஷயத்தை யோசிக்கணும். சட்டசபையில் வெளிநடப்பு பண்ணும் சமயங்களில் தலைமை கழக சாலையில் ‘மாதிரி சட்டசபை’ நடத்த வேண்டுமானால் துரைமுருகனை பயன்படுத்தலாமே தவிர, மாதிரி செயல்தலைவராக நடக்க அவருக்கு அதிகாரம் கொடுக்க கூடாது.
நம்மை எப்படி வேண்டுமானாலும் கண்டிக்கிற, தண்டிக்கிற உரிமை தளபதிக்கு இருக்குது. ஆனால் தவறு செய்யும் நிர்வாகிகளை அடிக்க துரைமுருகன் எனும் பிரம்பை அவர் கையில் எடுத்தால் நாம அதை சகிச்சுக்க வேண்டிய அவசியமில்லை.” என்று பொங்கி தீர்த்திருக்கின்றனர்.
இதுமட்டுமில்லாமல் தி.மு.க.வின் பல மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களுக்குள் நடத்துகின்ற வாட்ஸ் அப் குரூப்களில் துரைமுருகன் பற்றிய நக்கல் கமெண்ட்ஸுகளும் தாறுமாறாக ஷேர் ஆகின்றன. இவையெல்லாம் காட்பாடி வெயிலை விட கன்னாபின்னா சூடு என்கிறார்கள்.
மா.செ.க்கள் பலரின் இந்த பொங்கலோ பொங்கல் விவகாரம் அவருக்கு வேண்டப்பட்ட மா.செ.க்கள் சிலர் வழியே துரைமுருகனின் காதுகளுக்கும் போனதாம். உடனே ‘அவங்க சொன்னது உண்மைதான். தலைவரின் நிழலாகதான் நான் இருந்தேன். ஆனா அப்படி இருந்ததால் தளர்ந்தபோதெல்லாம் தலைவரை நான் தாங்கிபிடித்தது தளபதிக்கு தெரியும். தலைவர் தளர்வதென்பது கழகம் தளர்வதற்கு சமம். அப்படியென்றால் கழகத்தின் என்னுடைய உழைப்பு எந்தளவுக்கு இருக்குதுன்னு புரிஞ்சுக்குங்க.
விடுங்கய்யா, நல்ல பொசிஷன்ல இருக்கிறவன் மேலே இந்த மாதிரி விமர்சன கல்வீச்சு நடந்துட்டே இருக்குறது அரசியல்ல காலம் காலமா நடக்குற துயரம். நம்ம கழகம் மட்டும் அதுக்கு விதிவிலக்கா என்ன?”என்று ஃப்ரீயாக விட்டாராம்.