
அடையாரில் பங்களா...
பாண்டி ஆரோவில்லில் 5 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் சொகுசு மாளிகை..
தேனி மாவட்டத்தில் எஸ்டேட்...
லண்டன், சிங்கப்பூரில் பிசினஸ்...
அரசியல், அதிகாரம் என கொடிகட்டி பறந்த தினகரனை மூட்டை முடிச்சுகளை தூக்க விட்டு விட்டனர் டெல்லி போலீசார்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலமாக இந்திய தேர்தல் ஆணையதுக்கே ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டில் வசமாக சிக்கி கொண்டார் தினகரன்.
ஏற்கனவே கண்காணிப்பு வளையத்தில் இருந்த சுகேஷ் சந்திராவின் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டு வந்தது. சுகேஷ் சந்திராவுக்கு விரிக்கப்பட்ட வலையில் நேர கிரகம் சரியில்லாததால் சிக்கி கொண்டவர்தான் தினகரன்.
ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்த தினகரன் தற்போது டெல்லி போலீஸ் கையில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார்.
முதலில் சுகேஷ் யாரென தெரியாது என்று சொல்லிவந்த தினகரனை ‘வழ வழ’ என்று பேசாமல் பாட்சா ரஜினி ஸ்டைலில் சொல்லவேண்டியதை மட்டும் சொல்லிவிட்டு வாயை மூட செய்து விட்டனர்.
பின்னர் வெளி சாப்பாடுக்கு தடை... அவர்கள் கொடுப்பதை தான் சாப்பிட வேண்டும் என்பதில் ஆரம்பித்தது தினகரனுக்கு தலைவலி.
பெரிய அச்சுறுத்தலோ கூட்டமோ இல்லாத நிலையிலும் தினகரனின் தோள் மீதும் அவரது இடுப்பை பிடித்து கொண்டும்தான் டெல்லி போலீஸ் சென்றனர்.
இதனால் கடும் விரக்திக்கு தினரகன் ஆளானதாக சொல்லப்படுகிறது.
பல இடங்களில் டெல்லி போலீசின் கையை தினகரன் தட்டி விட்டும் அவர்கள் அதை கண்டு கொள்ளவில்லையாம்.
அதே போன்று தனக்காக வந்த வண்டியில் ஏற விடாமல் பழைய தகர டப்பா வண்டியிலேயே ஏற்றி கொண்டு சென்றனராம்.
சசிகலா பெங்களூரு சிறைக்கு செல்லும்போது கூட அவரது வண்டிக்கு பின்னால் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 ஸ்போர்ட்ஸ் பென்ஸ் கார்களை ஒரு பாதுகாப்புக்காக அனுப்பியவர் தினகரன்.
ஆனால் தற்போது விசாரணையின் போதே தகரடப்பா ஜீப்பில் அமர வைத்து அழைத்து செல்கின்றனர் என்று நொந்து விட்டாராம்.
அதே போன்று தனது மனைவி அனுராதா மற்றும் நண்பர்களிடம் மிக கடுமையாக நடந்து கொண்டார்களாம் டெல்லி போலீஸ்.
அனைத்தையும் விட உச்ச அரசியல் அதிகாரங்களை பார்த்து விட்ட ,பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதியான தினகரனை ஏர்போர்ட்டில் தனது லக்கேஜ்களை தானே சுமந்து செல்ல வேண்டிய கட்டாயம் தான் மிக கொடுமையானது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
பொதுவாக தினகரன் வெளிநாடோ வெளியூருக்கோ விமானத்தில் பறக்கும்போது ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை பி.ஏ.க்கள் உடன் எடுத்து செல்வர்.அதே போன்று துணிமணி லக்கேஜ் பைகளை தனது வீட்டு வேலைக்காரர்கள் எடுத்து செல்வார்கள்.
ஆனால் டெல்லி சிறையில் அடைக்கப்பட உள்ள தினகரனை ஒரு பெரிய கைப்பையை தூக்க வைத்து விட்டனர் காவல்துறையினர்.
இதில் எல்லாவற்றையும் விட கொடுமை என்னவென்றால் கைப்பையை தூக்கி செல்லும் தினகரனின் இரு கைகளையும் இரு போலிசார் இறுக்கமாக பிடித்து சென்றதுதான்.
மனித வாழ்வில் எதுவும் யாருக்கும் நிரந்தரமில்லை என்பதை தான் தினகரன் போன்ற விஐபிக்களுக்கு அடிக்கடி நடக்கும் இது போன்ற சம்பவங்கள் எடுத்து காட்டுகின்றன.