ஆளுநர் ஆர்.என் ரவியின் முதல் உரை... கொரோனா விதிமுறைகளுடன்.. இன்று தொடங்குகிறது "சட்டப்பேரவை" கூட்டம் !

By Raghupati RFirst Published Jan 5, 2022, 8:58 AM IST
Highlights

நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.என் ரவியின் உரையுடன் கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது.

நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் புனித ஜார்ஜ் கோட்டை சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக கலைவாணர் அரங்கிலேயே கூட்டத்தொடர் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் கலைவாணர் அரங்கத்தில் ஜனவரி 5 ஆம் தேதிநடைபெறும் என்று சட்டப்பேரவை செயலகம் தெரிவித்தது.

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டம் நடத்தும் முடிவு மாற்றப்பட்டுள்ளது.  எனவே சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்றது.  பெரம்பலூர் சட்டசபைத் தொகுதி திமுக எம்எல்ஏவான பிரபாகரனுக்கும், அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ எஸ்டி ராமச்சந்திரனுக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.இந்த கூட்டத்தொடரில்,வரும் ஆண்டில் திமுக அரசு செயல்படுத்த உள்ள திட்டங்கள் மற்றும் கொள்கை ரீதியிலான அம்சங்கள் ஆளுநர் உரையில் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. 

குறிப்பாக,கடந்த கூட்டத்தில் நீட் தேர்வு ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்ட பிறகும்கூட இன்னும்,ஆளுநர் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற நிலுவையில் இருப்பது தொடர்பாகவும்,மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் டெல்லா விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணம் குறித்தும் ஆளுநர் உரையில் இடம் பெறும் என்று கூறப்படுகிறது.

மேலும்,ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை,நீர் நிலைகளை ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்பது தொடர்பான சட்ட மசோதாக்கள் போன்றவை இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெறும் கூட்டத்தொடர் தமிழகத்தின் ஆளுநராக ஆர்என் ரவி அவர்கள் பொறுப்பேற்ற நிலையில் நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!