காக்கிகளை கதறவிட்டு தண்ணி காட்டும் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட் டில் விசாரணை..!

By vinoth kumarFirst Published Jan 5, 2022, 7:19 AM IST
Highlights

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்திரன் உள்ளிட்டோருக்கு, ஆவின் மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக, 3 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கி மோசடி செய்து விட்டதாக புகார்கள் வந்தன. இது குறித்து, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

பணமோசடி வழக்கில் தலைமறைவாக இருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கேட்டு தொடர்ந்த  மேல் முறையீட்டு மனு  நாளை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது. 

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்திரன் உள்ளிட்டோருக்கு, ஆவின் மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக, 3 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கி மோசடி செய்து விட்டதாக புகார்கள் வந்தன. இது குறித்து, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

இதையடுத்து, ராஜேந்திர பாலாஜி தரப்பில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், கடந்த டிசம்பர் 17-ம் தேதி அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சினிமா பாணியில் வெவ்வேறு கார்களில் மாறி மாறி சென்று அவர் தலைமறைவானதாக தகவல் வெளியானது. அவரை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வருகிறார். கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டுள்ளனர். 

மேலும், 600க்கும் மேற்பட்ட போன் அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். ஆனாலும், அவரை நெருங்க முடியவில்லை. இதனிடையே, தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி விமானம் மூலமாக வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க அவருக்கு எதிராக கடந்த 23ம் தேதி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த  சாத்தூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன், உதவியாளர் சீனிவாசபெருமாள் உள்ளிட்டோரடம் விசாரணை நடத்தப்பட்டது. 

மேலும், ராஜேந்திர பாலாஜி வெவ்வேறு சிம்கார்டுகள் பயன்படுத்தி, வழக்கறிஞரை தொடர்பு கொள்வதாவும், போலீசார் நெருங்குவது அவருக்கு முன்கூட்டியே தெரிந்து விடுவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த இரு வாரங்களுக்கு  முன்னதாக ராஜேந்திர பாலாஜி மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.  இவ்வழக்கானது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில்  நாளை விசாரணைக்கு  வருகிறது. அப்போது, தொடர்ந்து தலைமைறைவாக இருக்கும் ராஜேந்திர பாலாஜிக்கு  முன்ஜாமீன் கிடைக்குமா என்பது தெரியவரும்.

click me!