
கோவையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அலங்கார வளைவில் மோதி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிங்காநல்லூர் திமுக எம்எல்ஏ, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
கோவை மாவட்டம், சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரகுபதி. இவர் அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப பொறியாளராக பணிபுரிந்தார். இவர் தனது திருமணத்துக்காக பெண் பார்க்க, சொந்த ஊர் வந்த அவர், இரு தினங்களுக்கு முன்னர் பழனி கோயில் செல்வதற்காக இரு சக்கர வாகனத்தல் சிங்காநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, பீளமேடு அருகே நடைபெற உள்ள நிலையில் அதற்காக அலங்கார வளைவுக் கம்பளம் அமைக்கப்பட்டிருந்தது. அப்போது, இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ரகுபதி, அலங்கார வளைவு கம்பத்தில் மோதி, நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவ்வழியாக சென்ற வாகனம் ஒன்று, ரகு மீது ஏறியது. இதில் ரகு பரிதாபமாக உயிரிழந்தார். ரகுவின் உயிரிழப்புக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், சிங்காநல்லூர் திமுக எம்எல்ஏ கார்த்திக், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பேனர் வளைவில் மோதி உயிரிழந்த ரகுபதியின் குடும்பத்தாருக்கு இழப்பீடு தர வேண்டும் என்றும், பேனர் வைப்பதற்கு நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளார்.