
கடந்த இரண்டு வருடங்களாக பூஜை நடக்காமல் பூட்டப்பட்டு கிடந்த ப ழவேற்காடு ஆதிநாராயண சுவாமி கோயில் நம் முயற்சியால் தற்போது திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது என்று கூறினார் ஹெச்.ராஜா.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கோவிலில் இருந்த சிலைகள் மற்றும் ரூ.10 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை விற்று மோசடி செய்துள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் மீது பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டினார்.
பொன்னேரியை அடுத்த பழவேற்காட்டில் உள்ளது ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஆதிநாராயண சுவாமி கோவில். இந்தக் கோவில் சில ஆண்டுகளாக பழுதுபட்டிருந்தது. அதனால், இங்கே பூஜைகள் நடைபெறவில்லை. இந்நிலையில், கோயில் பூட்டிக் கிடந்ததைப் பயன்படுத்தி இங்குள்ள பொருட்கள் விற்கப்பட்டு கோடிக்கணக்கில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து இந்தக் கோவிலை ஹெச்.ராஜா நேற்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்தக் கோவிலை 2012ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. அதுவரை கோயிலில் தினமும் பூஜை நடத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குச் சென்ற பின்னர், இந்தக் கோயில் பராமரிக்கப் படவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் இக் கோயிலைச் சுற்றிலும் புதர் மண்டி கிடக்கிறது.
இதனால், சமூக விரோதிகள் இங்கே புழங்கி, சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பூட்டிக் கிடக்கும் கோயிலுக்கு எதற்கு நிர்வாகி? அவருக்கு எதற்கு சம்பளம்? இந்த கோயிலின் தாயார் சன்னிதி இடிக்கப்பட்டுள்ளது. கோயில் உத்திரங்களில் இருந்த செம்மரக்கட்டைகள் பெயர்த்து எடுக்கப்பட்டு மாயமாகியுள்ளது.
கோயிலில் இருந்த சிலைகளும் மாயமாகி உள்ளன. ரூ.10 கோடி மதிப்புள்ள சுமார் 10 டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகள் மற்றும் சிலைகள், பொருட்களை அதிகாரிகள் திருட்டுத்தனமாக விற்று கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளனர்.
இந்தக் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். மோசடி செய்த பணத்தை கோயில் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும். இந்துக் கோவில்களை விட்டு இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக வெளியேற வேண்டும். அப்போதுதான் இந்துக் கோவில்களை காப்பாற்ற முடியும். இல்லை என்றால் இந்துக்கள் வீதிக்கு வர வேண்டிய நிலை வந்துவிடும்.
திராவிட இயக்கத்தின் குறிக்கோள் இந்துக் கோவில்களை அழிக்க வேண்டும் என்பதுதான். எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவில் கொள்ளையர்களின் கூடாரமாக மாறி விட்டது. இந்து சமய ஆன்றோர், சான்றோர் அடங்கிய வாரியத்தை அமைத்து இந்து கோவில்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.. என்று கூறினார் ஹெச்.ராஜா.
இது குறித்து அவர் தம் டிவிட்டர் பதிவில் வெளியிட்ட தகவல்...