புழல் சிறையில் இருந்து அமலாக்கத்துறையால் அழைத்து செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இரவு நேரத்தில் 3 மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் விசாரணையை அமலாக்கத்துறை தொடங்கியுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை பல கட்டங்களை கடந்த நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருதய பகுதியில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சுமார் 35 நாட்களுக்கு பிறகு செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இதனையடுத்து புழல் சிறைக்கு மின்னஞ்சல் மூலம் உச்சநீதிமன்ற உத்தரவு வந்த நிலையில் நேற்று இரவே அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நேசென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனுக்கு அழைத்து வரப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த விசாரணையின் போது அமலாக்கத்துறை சோதனையின் போது சிக்கிய ஆவணங்கள், வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பண விவரங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இரவு 12 மணி வரை விசாரணை நடத்தப்பட்டநிலையில்,செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு ஓய்வெடுக்க அனுமதி வழங்கப்பட்டது அதன் பின்பு மீண்டும் விசாரணையானது காலை 6மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.