பண மோசடி புகாரில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு 4 முறை நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த அசோக்குமாரை அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ளது.
செந்தில் பாலாஜி கைது
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக அமலாக்கத்துறை கடந்த கடந்த ஜூன் மாதம் அவரை கைது செய்தது. இதற்கு முன்னதாக வருமான வரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இல்லங்களில் சோதனை நடத்தியிருந்தது. அப்போது முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியது. இதனையடுத்து அமலாக்கத்துறையும் சோதனை நடத்தியிருந்தது. அப்போது கணக்கில் காட்டாத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியது.
தலைமறைவான அசோக்குமார்
இதனையடுத்து விசாரணைக்கு ஆஜராகும் படி அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு 4 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அசோக்குமார் கடந்த 4 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த வாரம் கரூரில் அசோக்குமார் கட்டி வந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டில் சோதனை நடத்தி வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் புதிய பங்களா கட்டப்படுது தொடர்பாக விளக்கம் அளிக்க அசோக்குமார் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்தநிலையில் பல மாதங்களாக தலைமறைவாக இருந்த அசோக்குமாரை அமலாக்கத்துறை தீவிரமாக தேடி வந்தது.
கொச்சியில் கைது செய்த அமலாக்கத்துறை
இந்தநிலையில் கேரளாவில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து கொச்சிக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அசோக்குமாரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து இன்று மாலை சென்னைக்கு அழைத்து வரப்பட்டு நாளை காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை நீதிமன்றத்தில் அசோக்குமார் ஆஜர் செய்யப்படும் பொழுது அமலாக்கத்துறை தங்களது கஸ்டடியில் அசோக்குமாரை எடுக்கும் என தெரிகிறது.