
ஆர்.கே.நகரில் போட்டியிட டிடிவி தினகரன் கேட்ட 3 சின்னங்களையும் தேர்தல் அவருக்கு ஒதுக்கவில்லை.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இதில் அதிமுக சார்பில் மதுசூதனும், திமுக வேட்பாளராக மருது கணேஷும், பாஜக சார்பில் கரு.நாகராஜனும், சசிகலா அணியில் டிடிவியும், சுயேட்சைகளாக நடிகர் விஷால், தீபா உள்ளிட்டோர் வேட்புமனுதாக்கல் செய்திருந்தனர்.
மொத்தம் 135 பேர் வேட்புமனுதாக்கல் செய்தனர். இதன் பரிசீலனை கடந்த 4 ஆம் தேதி முதல் நடைபெற்றது. அப்போது, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, நடிகர் விஷால் உள்ளிட்ட சில சுயேட்சை வேட்பாளர்களின் படிவங்கள் நிராகரிக்கப்பட்டன.
இதையடுத்து வேட்பாளர்களின் இறுதி பட்டியலை தேர்தல் அலுவலர் வேலுச்சாமி வெளியிட்டார். அப்போது, 72 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் இதில் 13 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஆர்.கே.நகரில் 59 பேர் போட்டியிட உள்ளதாக தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதைதொடர்ந்து சின்னங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் டிடிவி தினகரன் ஏற்கனவே போட்டியிட்ட தொப்பி சின்னத்தை கோரியிருந்தார். அதை கிடைக்காத பட்சத்தில் விசில் சின்னமும் கிரிக்கெட் மட்டை சின்னமும் கேட்டிருந்தார்.
இந்நிலையில், தொப்பி சின்னத்தை பதிவு செய்யப்பட்ட கட்சிகள் கோரியதால் டிடிவி தினகரனுக்கு கிடைக்கவில்லை. இதைதொடர்ந்து விசில் சின்னமும் கிரிக்கெட் மட்டை சின்னமும் கூட டிடிவிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. இதனால் டிடிவி கேங் செம கடுப்பில் உள்ளதாக தெரிகிறது.