
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிடும் மதுசூதனனுக்கு இரட்டை இல்லை சின்னம் வழங்கக்கூடாது என டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இந்த நிலையில், வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்றது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு இம்மாதம் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்த ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா காரணமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, டிசம்பர் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருந்தது. தற்போது ஆர்.கே.நகரில் போட்டியிட வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 29 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதையடுத்து வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கம் பணி இன்று நடைபெற்றது. அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படும் என முடிவாகி இருந்த நிலையில், டிடிவி தினகரன் சார்பில் தற்போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுசூதனனுக்கு சின்னம் ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வேட்புமனுத் தாக்கல் செய்யும் படிவத்தில், போட்டியிடும் வேட்பாளரின் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் உள்ள நபர் மட்டுமே கையெழுத்திட்டிருக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை என்றும், ஆனால் மதுசூதனன் வழங்கியிருக்கும் படிவத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டுள்ளனர். எனவே மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என தினகரன் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
டிடிவி தினகரன் தரப்பு தொப்பி சின்னம் கேட்டிருந்த நிலையில், நமது கொங்கு முன்னேற்ற கழக வேட்பாளர் ரமேசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரனுக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்படத்தக்கது.