
சென்னையில் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இடைத்தேர்தல் நடைபெற்ற இரு தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனுவில் கைரேகை வைத்து அங்கீகரித்ததாகக் கூறப்பட்ட விவகாரத்தில், ஜெயலலிதாவின் கைரேகையை பெற்றது தொடர்பான விவரங்களை அளிக்க, விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார் டாக்டர் பாலாஜி.
அப்போது அவர், வேட்புமனுவில் கைரேகை வைத்தபோது ஜெயலலிதா சுயநினைவோடு இருந்தார் என்று சாட்சியம் அளித்துள்ளார். மேலும், கைரேகை பெறும்போது ஜெயலலிதாவை நான் சந்தித்தேன். ஆனால், அவருக்கு நான் சிகிச்சை அளிக்கவில்லை.
ஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ் மருத்துவர்களும், லண்டன் மருத்துவர்களும்தான் சிகிச்சை அளித்தார்கள். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இருந்தெல்லாம் மருத்துவர்கள் வந்தார்கள்.
மேல் சிகிச்சைக்காக அவர் லண்டன் செல்ல வேண்டும் என்ற அறிவுறுத்தலை ஜெயலலிதா ஏற்கவில்லை. மேலும், ஜெயலலிதாவுடன் கடைசி வரைக்கும் கூடவே சசிகலா மட்டுமே இருந்தார் என்று கூறினார்.
மேலும் செய்தியாளர்களிடம் டாக்டர் பாலாஜி கூறியபோது, ஆணையத் தலைவர் ஆறுமுகசாமியின் அனைத்து கேள்விகளுக்கும் நான் பதில் அளித்துள்ளேன். அது தொடர்பான ஆதாரங்களையும் வழங்கியுள்ளேன். அடுத்து வரும் டிச.27ஆம் தேதி மீண்டும் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராவேன் என்று கூறினார்.