
இன்று மதியம் 3 மணியளவில் ஆர்கேநகரில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் இறுதி பட்டியலை தேர்தல் அலுவலர் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் விஷால் தேர்தல் அலுவலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால் குறிப்பிட்டபடி பட்டியல் வெளிவருவதில் சந்தேகம் எழுந்துள்ளது.
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட நடிகர் விஷால் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் நடிகர் விஷால், வேட்புமனுவில் 2 போலி கையெழுத்துக்கள் உள்ளதாகவும், சொத்து கணக்கு விவரங்கள் முறையாக குறிப்பிட்டதாலும் அவருடைய மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்துதண்டையார் பேட்டை சென்ற விஷால் தமது ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இரண்டாவது முறையாக தேர்தல் அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்திய விஷால் தகுந்த வீடியோ ஆதாரமும், ஆடியோ ஆதாரமும் இருப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், மிரட்டப்பட்டதாக கூறப்படும் வேலு என்பவரிடம் தான் பேசிய ஆடியோவை நடிகர் விஷால் வெளியிட்டார். இதையடுத்து ஆதாரத்தின் அடிப்படையில் விஷாலின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.
ஆனால் சில மணிநேரங்களில் மீண்டும் வேட்புமனுவை நிராகரித்து அதிகாரப்பூர்வமாக தேர்தல் அலுவலர் வேலுசாமி தெரிவித்தார்.
இதையடுத்து ஆர்.கே.நகரில் போட்டியிட வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் நடிகர் விஷால் மனு அளித்து முறையீடு செய்துள்ளார்.
இதனிடையே விஷாலை முன்மொழிந்த சுமதி, தீபன் இருவரும் மாயமாகியுள்ளனர். இந்நிலையில், சென்னை ஆர்.கே.நகரில் தேர்தல் அலுவலர் வேலுச்சாமியை நடிகர் விஷால் சந்தித்து பேசினார். நிராகரிக்கப்பட்ட தனது வேட்புமனுவை மீண்டும் பரிசீலிக்க கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் குறிப்பிட்டபடி பட்டியல் வெளிவருவதில் சந்தேகம் எழுந்துள்ளது.