
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நிறுத்த சதி நடக்கிறது என்று பொருமித் தள்ளியுள்ளார் திமுக., செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்
திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூரில் ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ஆர்.கே.நகரில் முன்னர் தேர்தல் நிறுத்தப் பட்டதற்குக் காரணமே, ரூ.89 கோடி பணப்பட்டுவாடா புகார்தான். இந்தப் புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இது வரை இல்லை.
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது குறித்து நடவடிக்கை எடுக்காமல், மீண்டும் அங்கே இடைத் தேர்தல் நடைபெறுகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முறையாக நடந்தால் திமுக நிச்சயம் வெற்றி பெறும். திமுக வெற்றிபெறும் என்பதால் ஆர்.கே. நகர் தேர்தலை நிறுத்த சதி நடக்க வாய்ப்புள்ளது.
இந்த அரசுக்கு பெரும்பான்மை இல்லை. ஆளுநர், சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும். கன்னியாகுமரியில் மாயமான மீனவர்கள் குறித்து, முறையான கணக்கெடுப்பு இதுவரை நடத்தப்படவில்லை. அது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.. என்று பேசினார் மு.க.ஸ்டாலின்.
ஏற்கெனவே, இரு தரப்புமே வாக்காளர்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு பணம் கொடுத்தனர். அது தேர்தல் ஆணைய தொகுதி கண்காணிப்பாளர்களால் கண்டறியப் பட்டு எங்களால் இதைத் தடுக்க முடியவில்லை என்று பகிரங்கமாகக் கூறினர். இந்நிலையில், பேடிஎம்.,உள்ளிட்ட நூதன முறைகளில் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடாவுக்கு முயற்சிகள் நடப்பதாக புகார்கள் அங்கே எழுந்துள்ளன.