
ஆர்.கே.நகரில் சுயேச்சையாகப் போட்டியிடும் அனைவருக்கும் இன்று சின்னம் ஒதுக்கியாக வேண்டும். சின்னம் ஒதுக்கப்பட்ட பின்னர்தான் அவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியும்.
இந்நிலையில், சுயேச்சை வேட்பாளர்கள் சின்னம் பெற நேரில் ஆஜராக வேண்டும். அதுவும் இன்று மாலை 5 மணிக்குள் சுயேச்சை வேட்பாளர்கள் நேரில் வர வேண்டும். அப்போது அவர்களுக்கான சின்னம் குறித்து தெரியவரும். இதனை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி இன்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, விஷால் விடாப்பிடியாக மேலும் மேலும் முட்டி மோதுவதால், அவரது வேட்பு மனுவை மீண்டும் பரிசீலனை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எவருக்கும் வாய்ப்பு மறுக்கப் படக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால், விஷாலுக்கு ஆதரவாக வேட்பு மனுவில் முன் மொழிந்த தீபன், சுமதி என இருவர் இன்று மாலை3 மணிக்குள் தேர்தல் அலுவலரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தால், அவர்கள் தரப்பு விளக்கத்தை ஏற்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி அவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தால், விஷாலின் மனு ஏற்கப்பட்டு சின்னம் ஒதுக்கப்படலாம். ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே.
இந்த நிலையில், இது குறித்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் கேட்ட போது, விஷால் விவகாரத்தில் இதுவரை எந்த தகவலும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இன்னொரு முக்கியமான நபர், டிடிவி தினகரன். அவர் தொப்பி சின்னத்தை தனக்கு ஒதுக்குமாறு கோரியிருந்தார். அவரது கோரிக்கையும் நிறைவேற வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. அங்கீகரிக்கப் பட்ட கட்சிகளின் வேட்பாளர்களும் தொப்பியைக் கோரியிருப்பதால், அவர்களுக்கே முன்னுரிமை தரப்படும் எனவும், தினகரன் சுயேச்சையாக போட்டியிடுவதால் அவருக்கு தொப்பி கிடைக்க வாய்ப்பில்லை என்றும் முன்னரே கூறப்பட்டிருந்தது.