மீண்டும் சூடுபிடித்த தேர்தல்களம் !! கோவை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ரேஸ்.. திமுக Vs அதிமுக..?

By Raghupati RFirst Published Jan 25, 2022, 12:48 PM IST
Highlights

தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் வெகு தீவிரமாக செய்து வருகிறது. 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது கொரோனா காரணமாக தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், மாநிலம் முழுவதும் 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கான மக்கள் பிரநிதிகள் இல்லாமல் அதிகாரிகள் மூலம் நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது.

திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்கள் நிர்வாகிகள் தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வேட்பாளர் பட்டியலையும் தயார் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில், கொரோனாவால் தேர்தல் நடைபெறுமா ? எனவும் கேள்வி எழுந்துள்ளது. கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளில் மிக வேகமாக நடந்து வருகிறது. 

கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. தற்போது கோவை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர மொத்தமுள்ள 100 வார்டுகளில் 50 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியை கைப்பற்றும் முனைப்பில் திமுக மற்றும் அதிமுக கட்சியினர் உள்ளனர்.அதற்கான வேலைகளை சில மாதங்களுக்கு முன்பே 2 கட்சியினரும் கோவை மாநகர பகுதிகளில் தொடங்கி செய்து வருகின்றனர். கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 9 அதிமுக எம்.எல்.ஏக்கள், ஒரு பாஜக எம்.எல்.ஏ வசம் இருக்கிறது. இரண்டு மக்களவை தொகுதிகளை பொறுத்தவரை திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வசமிருக்கின்றது.

இந்தநிலையில்,  திமுக சார்பாக கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டு கோவை மக்கள் சபை, ஜல்லிக்கட்டு, சாலைப் பணிகள் என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். மறுபுறம் திமுக நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சென்று அதிமுக தங்களுக்கான ஆதரவை திரட்டி வருகிறது.  கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சி கள், 33 பேரூராட்சிகள் இருக்கின்றன. மொத்தம் 21.55 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். கோவை மாநகராட்சியில் மொத்த முள்ள 100 வார்டுகளில் 1,216 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 

மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, கருமத்தம் பட்டி, காரமடை, மதுக்கரை, கூடலூர், வால்பாறை ஆகிய 7 நகராட்சிகளில் 205 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. 33 பேரூராட்சிகளில் 590 வாக்குச்சாவடிகள் என மொத்தம் கோவை மாவட்டத்தில் சுமார் 2000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. கோவை மாநகராட்சியில் 100 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடக்கிறது. தேர்வு செய்யப்படும் கவுன்சிலர்கள் மறைமுக தேர்தல் மூலம் மேயர், துணை மேயர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பின் மண்டல குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர். 

மாவட்டத்தில் 7 நகராட்சிகள் உள்ளன. இவற்றில் உள்ள 198 கவுன்சிலர் பணியிடங்களுக்கு நேரடி தேர்தலும் அவற்றில் தலா ஒரு சேர்மன், துணை சேர்மன் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்தப்பட உள்ளது. மொத்தம் உள்ள 33 பேரூராட்சிகளில், 513 வார்டுகளுக்கு கவுன்சிலர் நேரடியாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மீதமுள்ள 811 பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவை மாநகராட்சி மேயர் பதவியானது பெண்கள் (பொது) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாக, முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் வெளியிட்டிருக்கிறார். மாநகராட்சியின் 100 வார்டுகளில், 47 வார்டுகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார், இதில், 25 பேர் பெண்கள்.சட்டசபை தேர்தல் தோல்வியாலும், சினிமாவில் நடிப்பதற்கு கமல் சென்றிருப்பதாலும், ம.நீ.மய்யத்தினர் ஒதுங்கி விடுவார்கள் என, இரு திராவிட கட்சியினரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தேர்தல் அறிவிப்புக்கு முன்பே, 47 வேட்பாளர்களை களமிறக்கி இருப்பது, திராவிடக் கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. 

செந்தில்பாலாஜியை எளிதில் தோற்கடித்து விடலாம் என்று மற்றொரு பக்கம் களத்தில் இறங்கி படு வேகமாக வேலை செய்து வருகிறார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இதனால் கோவையின் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

click me!