
’தமிழக அரசியல் வரலாற்றில் முதன் முறையாக முதல்வரும், துணை முதல்வரும் கலந்து கொள்ளும் வைபவம்’ எனும் அருட்பெரும் பட்டத்தை தட்டிச் செல்லப்போகிறது அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டு வைபவம்.
என்னதான் மங்குனி மினிஸ்டராக மீம்ஸ்களில் வறுபட்டாலும் கூட அமைச்சர் செல்லூர் ராஜூ பலே அரசியல் கில்லாடிதான். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது கவனத்தை ஈர்ப்பதற்காக இவர் நடத்திய நிகழ்ச்சிகள் அம்மாடியோவ்வ்வ்வ்! ரகங்கள்தான்.அம்மாவுக்காக பேரணிகளாகட்டும், கூட்டங்களாகட்டும் மனிதர் பின்னியெடுத்துவிடுவார்.
இவ்வளவு ஏன்? ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவுநாளுக்கான அமைதி ஊர்வலத்தை கூட அமர்க்களமாக நடத்தியவர் அவர்.
இப்பேர்ப்பட்ட செல்லூர் ராஜூ தனது வீட்டு வைபவத்தை ஜஸ்ட் லைக் தட் ஆகவிட்டு வைப்பாரா? நாளை ஞாயிற்றுக் கிழமையன்று மதுரை அருகே பாண்டி கோயிலில் வைத்து செல்லூர் ராஜின் மகள்கள் வழி பேரக்குட்டிகளுக்கு காதணி விழா நடக்கிறது. இதற்காக மிக பிரம்மாண்டமாக ஏற்பாடுகளை செய்திருக்கிறார் ராஜூ.
இந்த நிகழ்வில்தான் முதல்வர் எடப்பாடியாரும், துணை முதல்வர் பன்னீரும் கலந்து கொள்கிறார்கள். இதைத்தான் ‘தமிழக அரசியலில் முதன் முறையாக முதல்வர்கள் கலந்து கொள்ளும் காதணி விழா’ என்று இறுமாப்பாக மீசையை முறுக்கி கர்வமாய் சொல்கிறது செல்லூர் ராஜூவின் ஆதரவுக் கூட்டம்.
இது இப்படியிருக்க, ‘காதணி விழான்னா என்ன? காது குத்தும் விழாதானே! அதைத்தான் எடப்பாடியும், பன்னீரும் சூப்பரா பண்ணுவாங்களே. கெளப்புங்க, கெளப்புங்க!’ என்று கலாய்த்திருக்கிறது தினகரன் டீம்.