கொரோனாவில் இருந்து மீள்வதற்குள் மற்றுமொரு சவால் வந்துவிட்டது.. உடனே மருந்தை அனுப்பி வையுங்க.. சு.வெங்கடேசன்.!

By vinoth kumarFirst Published May 25, 2021, 1:51 PM IST
Highlights

நம் மக்களின் இன்னுயிர் காக்கவும் மருத்துவ உலகிற்கு நம்பிக்கை அளிக்கவும் மேலை நாடுகளில் எளிதில் தற்போது கிடைக்க கூடிய இந்த உயிர்காப்பான் மருந்தை இறக்குமதி செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நம் மக்களின் இன்னுயிர் காக்கவும் மருத்துவ உலகிற்கு நம்பிக்கை அளிக்கவும் மேலை நாடுகளில் எளிதில் தற்போது கிடைக்க கூடிய இந்த உயிர்காப்பான் மருந்தை இறக்குமதி செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு எழுதிய கடிதத்தில்:- நம் நாடு முன் எப்போதும் கண்டிராத அளவில் பல சவால்களை  இந்த கோவிட் பெருந்தோற்று நோயினால் கண்டு வருகிறது. பெருநகரங்களில் தொற்றின் அளவு தற்போது சற்று குறைந்து வந்தாலும் இன்னும் சில சிறிய ஊர்களிலும் கிராமங்களிலும் இந்த தொற்று குறைந்தபாடில்லை. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில்  இன்னும் அதிக அளவில் தான் நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கைகள் இருக்கின்றன. இந்த சவாலை நாம் எதிர்கொண்டு இருக்கும் போதே மற்றுமொரு சவாலாக கருப்பு பூஞ்சை நோய் மக்களிடயே தாண்டவமாட தொடங்கி உள்ளது. 

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் இந்த கருப்பு பூஞ்சை நோயின் அதிதீவிரத்தை உணர்ந்து இந்த நோயை அரசுக்கு 'அறிவிக்கப் படவேண்டிய நோயாக' அறிவித்து உள்ளன. கொரோனா பெருந்தொற்று அளவிற்கு கருப்பு பூஞ்சை நோயாளர்களின் எண்ணிக்கை இல்லாவிடினும் இந்த பூஞ்சையின் வீரியம் மற்றும் நோயின் தீவிரத்தன்மை, நோயாளர்களில் பலருக்கு உயிரிழப்புகளை அதிவிரைவில்  ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ளது. இந்த நோய் குறித்து பல மருத்துவர்களிடம் ஆலோசித்து அதிலும் மரு. வெங்கடேஷ் பிரஜ்னா, மூத்த மருத்துவர், அரவிந்த் கண் மருத்துவமனை மதுரை (உலகின் பெரிய மற்றும் தலைசிறந்த கண்மருத்துவமனை ஆன அரவிந்த் மருத்துவமனையின் ஒரு தலைமை மருத்துவர்) அவர்களிடம் ஆலோசித்த போது இதற்கு தேவையான  மருந்து 'லிபோசோமல் அம்போடேரிசின் பி' என்பது தெரிய வந்தது.  

இந்த தொற்றுக்கான மருந்து இது தான் என்பதையும் பத்மஸ்ரீ மரு அசோக் குரோவர், தலைமை கண் மருத்துவர், கங்காராம் கண் மருத்துவமனை, புது தில்லி அவர்களிடமும் பேசி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறேன். ஆனால் அது நம் நாட்டில் இப்போது குறைந்த அளவில் தான் உள்ளது, கிடைப்பதும் அரிது என்பதும் உணர்ந்து கொண்டேன். இப்போது இருக்கும் காலக்கெடுவில் நம் உள்நாட்டு மருத்துவ நிறுவனங்கள் அத்தனை விரைவில் இந்த மருந்தை உற்பத்தி செய்வது கடினம் என்பதையும் உணர முடிகிறது. மேலை நாடுகளை விட இந்த நோய் இந்தியாவில் தான் அதிகம் காணப்படுகிறது. 

நமக்கு தற்போது தேவை சில ஆயிரம் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளே. இந்த இறக்குமதி வாயிலாக பல இன்னுயிர்களை நம்மால் காக்க முடியும் காலத்தே செய்யும் எந்த செயலும் மட்டுமே அதற்குரிய நன்மை பயக்கும். அதனால் என்னுடைய இந்த கடிதம் வலியுறுத்தும் தீவிரத்தை உணர்ந்து நோயால் அல்லல்படும் நம் மக்களின் இன்னுயிர் காக்கவும் மருத்துவ உலகிற்கு நம்பிக்கை அளிக்கவும் மேலை நாடுகளில் எளிதில் தற்போது கிடைக்கக் கூடிய இந்த உயிர்காப்பான் மருந்து ஆகிய 'லிப்போசோமல் அம்போடேரிசின் பி' மருந்தை உடனடியாக இறக்குமதி செய்ய தங்களிடம் வேண்டுகிறேன் என சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

click me!