பாஜக அரசுகள் செய்ததை திமுக அரசும் செய்யணும்... மு.க. ஸ்டாலின் அரசுக்கு மநீமவின் அதிரடி ஐடியா.!

By Asianet Tamil  |  First Published Nov 13, 2021, 7:34 PM IST

கர்நாடகா, புதுச்சேரி, மிசோரம், ஒடிசா, ஹரியாணா, உத்தரகாண்ட், குஜராத், திரிபுரா, சிக்கிம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது போலவே பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரியைத் தமிழகத்திலும் குறைக்க வேண்டும்.


தமிழ்நாடு அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்காமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மத்திய அரசு நவம்பர் 3 அன்று பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.10 விலையைக் குறைத்தது. இதனையடுத்து பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டன. தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துவந்தன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் தங்கவேலு இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

 

“பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் கலால் வரி பிரதான பங்கு வகிக்கிறது. தீபாவளி அன்று பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.5 என்ற அளவிலும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.10 என்ற அளவிலும் மத்திய அரசு குறைத்தது. இதனைத் தொடர்ந்து 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வாட் வரியும் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை தமிழ்நாடு அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்காமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது.

திமுக தேர்தல் வாக்குறுதியாக 'பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.5, டீசலின் விலை லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்படும்' என்று அறிவித்திருந்தது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது என்றாலும், எரிபொருள் விலையின் கிடுகிடு ஏற்றம், தமிழக மக்களுக்குத் தாங்கவியலாத கடும் சுமையாகவே இருக்கிறது. பல மாநிலங்கள் மதிப்புக் கூட்டு வரியைக் குறைத்திருக்கின்றன. கர்நாடகாவில் மதிப்புக் கூட்டு வரி குறைக்கப்பட்டதன் விளைவாக பெட்ரோல், டீசல் விலை ரூ.7 குறைந்து பெட்ரோல் ரூ.100.14க்கும் டீசல் ரூ.84.60க்கும் விற்பனையாகின்றன. புதுச்சேரியில் பெட்ரோலின் விலை 12 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.94க்கும், டீசலின் விலை 19 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.84.60க்கும் விற்கப்படுகின்றன.

ஆனால் தமிழகத்திலோ, பெட்ரோல் ரூ.101.40 க்கும் டீசல் ரூ.91.43க்கும் விற்பனையாகின்றன. எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலியத் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள, 1.10.2021 தேதியிட்ட தரவுப்படி, தமிழ்நாட்டில் வாட் வரியாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 13% + ரூ.11.52 , ஒரு லிட்டர் டீசலுக்கு 11% + ரூ.9.62 வரி விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 20.87 ரூபாய் பெட்ரோலுக்கும், 17.52 ரூபாய் டீசலுக்கும் வரி வசூலிக்கப்படுகிறது. கர்நாடகா, புதுச்சேரி, மிசோரம், ஒடிசா, ஹரியாணா, உத்தரகாண்ட், குஜராத், திரிபுரா, சிக்கிம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது போலவே பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ மீதான மதிப்புக்‌ கூட்டு வரியைத் தமிழகத்திலும் குறைக்க வேண்டும்.

தமிழக மக்கள் ஏற்கனவே கொரோனா பெருந்தொற்று, வருவாய் இழப்பு, விலைவாசி உயர்வு, வெள்ளச் சேதங்கள் எனத் தவித்து வருகிறார்கள். மக்களின் அன்றாட வாழ்க்கையை மேலும் மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மக்கள் நீதி மய்யம் கசி தெரிவித்துள்ளது. 

click me!