234 தொகுதிகளிலும் திமுக கூட்டணிதான் ஜெயிக்கப் போகுது... உச்சகட்ட நம்பிக்கையில் மு.க. ஸ்டாலின்..!

By Asianet TamilFirst Published Mar 16, 2021, 9:16 AM IST
Highlights

அதிமுக கூட்டணி ‘வாஷ் அவுட்’ – அதுதான் தமிழக மக்களின் நிலையாக இன்று இருக்கிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திருவாரூரிலிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது மு.க. ஸ்டாலின் பிரசாரத்தில் பேசுகையில், “நாடாளுமன்றத் தேர்தல் நடந்தபோது திருவாரூரில் இருந்து என்னுடைய பிரசாரத்தைத் தொடங்கினேன். இப்போது சட்டமன்றத் தேர்தலுக்கும் திருவாரூரிலிருந்துதான் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறேன். இந்தியாவின் வரலாற்றில் நாடாளுமன்றத்தில் இன்றைக்கு 3வது இடத்தில் திமுக கம்பீரமாக இருக்கும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தீர்களோ, அதேபோல இந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றியைத் தேடித்தர வேண்டும்.
 ‘இந்து’ ராம் அவர்கள் தன்னுடைய ட்விட்டரில் பதிவில், திமுக 234-க்கு 234 இடங்களில் வெற்றி பெறப்போகிறது என்று சொல்லியிருக்கிறார். அதிமுக கூட்டணி ‘வாஷ் அவுட்’ – அதுதான் தமிழக மக்களின் நிலையாக இன்று இருக்கிறது. எனவே அப்படிப்பட்ட வெற்றியைத் தேடித் தரவேண்டும் என்று உங்களை எல்லாம் கேட்டுக் கொள்வதற்காகத்தான், உங்களை தேடி - நாடி நான் இன்றைக்கு திருவாரூருக்கு வந்திருக்கிறேன். 10 ஆண்டுகாலமாக இந்த நாட்டை குட்டிச்சுவராக்கி கொண்டிருக்கும் பழனிசாமி அவர்களின் தலைமையில் இருக்கும் அ.தி.மு.க ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்களை தேடி - நாடி வந்திருக்கிறேன்.
10 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டைப் பாழடித்து விட்டார்கள். அம்மையார் ஜெயலலிதா 5 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தார். ஊழல் வழக்கின் காரணமாக அவர் தண்டிக்கப்பட்டு, அவரது பதவியை ராஜினாமா செய்தார். இடையில் பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தார். எனவே வழக்குப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த காரணத்தால் ஆட்சியை ஒழுங்காக நடத்தவில்லை. அதற்குப் பிறகு மீண்டும் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பை ஏற்று 1 ஆண்டு காலத்திற்குள் அவர் உடல் நலிவுற்று அவர் மறைந்து விட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் மறைந்த பிறகு 4 ஆண்டு காலமாக - இடையில் ஓ.பன்னீர்செல்வம் இருந்தார் - அதனைத் தொடர்ந்து பழனிசாமி அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்று எந்த அளவிற்கு சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாடு நன்றாக அறியும்.
ஜெயலலிதா இறந்ததற்கு காரணம் கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும்தான் என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்லியிருக்கிறார். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். 10 ஆண்டுகாலத்தில் 2வது முறையாக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு அவர் உடல்நலிவுற்று மருத்துவமனையில் படுத்திருந்த நேரத்தில் அவர் உடல்நலத்தைப் பற்றி வெளியில் சொல்வதற்குக் கூட துப்பற்ற ஆட்சியைத்தான் இவர் நடத்திக் கொண்டிருக்கிறார். நான் தொடர்ந்து பல நேரங்களில் குறிப்பிட்டு காட்டி இருக்கிறேன். இப்போது நமது தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறோம். அம்மையார் ஜெயலலிதா மர்ம மரணத்தை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கையை நாம் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு எடுப்போம் என்று உறுதிமொழி தந்திருக்கிறோம்.
பழனிசசாமி இந்த 4 ஆண்டு காலம் நீங்கள்தான் ஆட்சியில் இருந்தீர்கள். அப்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள். ஸ்டாலின்தான் காரணம் என்றால் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அல்லவா? இப்போது சொல்கிறேன். தைரியம் இருந்தால் - தெம்பு இருந்தால் ஜெயலலிதா மரணத்திற்கு ஸ்டாலின்தான் காரணமென்றால் வழக்குப் போடுங்கள். சந்திப்பதற்கு நான் தயார்… நீங்கள் தயாரா? நான் ரெடி… பழனிசாமி நீங்க ரெடியா?எதை வேண்டுமானாலும் பேசிவிட்டுப் போகலாமா? நாக்கில் உங்களுக்கு நரம்பு இல்லையா? கருணாநிதிதான் காரணம் என்று வாய்கூசாமல் பேசுகிறீர்களே எப்படி? அதுதான் எனக்குப் புரியவில்லை” என்று மு.க. ஸ்டாலின் பேசினார். 
 

click me!