ஓபிஎஸ் ஓரங்கட்டப் படுகிறாரா..! அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் நடந்தது என்ன..?

Published : Jun 15, 2022, 08:46 AM IST
ஓபிஎஸ் ஓரங்கட்டப் படுகிறாரா..! அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் நடந்தது என்ன..?

சுருக்கம்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை முழக்கம் எழுந்துள்ள நிலையில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்த நிர்வாகிகள்

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவின் நிலை கேள்வி குறியாக மாறியது. இதனையடுத்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இடங்கள் உருவாக்கப்பட்டு கட்சிக்கு ஓபிஎஸ்ம் ஆட்சிக்கு இபிஎஸ் பிரித்துக்கொண்டனர். தற்போது ஆட்சி அதிகாரத்தை இழந்த அதிமுக நாடாளுமன்ற தேர்தலையொட்டி கட்சியை பலப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில் இரட்டை தலைமையால் அதிமுகவில் உட்கட்சி நடவடிக்கை எடுப்பதில் கால தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டது. இதனால் ஒற்றை தலைமை என்கிற முழக்கும் அதிமுகவில் மீண்டும் எழுந்துள்ளது. ஜூன் 23ம் தேதி அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்திற்கு முன்னோட்டமாக மாவட்டச்  செயலாளர்கள் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.  சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டாலும், பிரதானமாக ஒற்றைத் தலைமையை வலியுறுத்தியே அனைவரும் பேசியுள்ளனர். இதில் பெரும்பாலான நிர்வாகிகள் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியும் வாக்கெடுப்பு மூலமாக  தலைமையை தேர்ந்தெடுக்க விரும்பினால் அதையும் ஏற்க தயார் என கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

ஜானகி போல் ஓபிஎஸ் விட்டு கொடுக்க வேண்டும்

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜானகி அம்மாள், ஜெயலலிதாவிற்கு அதிமுக தலைமையை விட்டுக்கொடுத்ததுபோல, ஒற்றை தலைமையை, எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஓ. பன்னீர்செல்வம் விட்டுத்தர வேண்டும் என நேரடியாகவே பேசியுள்ளார். அதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா உள்ளிட்ட ஒரு சிலர் ஆதரவு குரல் கொடுத்துள்ளார். அப்போது குறுக்கிட்ட மனோஜ் பாண்டியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் பேசிய திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா, எல்லா கட்சியிலும் ஒற்றைத் தலைமை மட்டும் தான் உள்ளது. இரட்டை தலைமை என்பது கிடையாது, முடிவுகள் எடுப்பதில் காலதாமதம் ஆவதால் ஒற்றை தலைமை ஒன்றே அதிமுகவை பலப்படுத்தும் என்றும் அதற்கான நேரம் தற்போது வந்துவிட்டதாகவும் தெரிவித்ததோடு, வருகின்ற 23ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை என்ற கொள்கை முடிவு எடுப்பதோடு, யார் ஒற்றைத்தலைமை என்று இறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

மேலும் ஒற்றைத்தலைமை முடிவை உடனடியாக ஊடகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டுள்ளார். இதே கருத்தை முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தியும் வலியுறுத்தியுள்ளார். ஆனால்  அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்,ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், வைகைச் செல்வன், வேளச்சேரி அசோக் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு,  இரட்டை தலைமையே இருக்கலாம் என்றும் பேசியுள்ளனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் கூட்டம் முடிந்து வெளியே வந்த முன்னாள அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொதுக்குழு முன்பாக நடந்துள்ள இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து ஆரோக்கியமாக விவாதிக்கப்பட்டது. பெரும்பாலான தலைமை கழக நிர்வாகிகள் , மாவட்ட செயலாளர்கள் கட்சி வளர்ச்சிக்கு ஒற்றைத்  தலைமை தேவை என்று கூறியுள்ளனர். மேலும் ஒற்றை தலைமையின் அவசியம் குறித்தும் மாவட்ட செயலாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள் அவர்களது முழு கருத்துக்களையும் ஜனநாயக முறைப்படி தெரிவித்தனர் என கூறினார்.  யார் தலைமை என்பது வரும் நாட்களில் கட்சித் தலைமை முடிவு செய்யப்படும் என தெரிவித்தவர், காலத்தின் கட்டாயத்தால் ஒற்றை தலைமை குறித்து விவாதம் நடைபெற்றதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!