தமிழக அரசின் முடிவு காலதாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது... மு.க.ஸ்டாலின் புகழாரம்..!

By vinoth kumarFirst Published Oct 16, 2020, 3:35 PM IST
Highlights

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்வதற்கு, பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் தமிழக ஆளுநருக்கு முதல்வர் பழனிசாமி உடனடியாகப் பரிந்துரை செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்வதற்கு, பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் தமிழக ஆளுநருக்கு முதல்வர் பழனிசாமி உடனடியாகப் பரிந்துரை செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் மத்திய அரசுக்கு துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதம் அவரால் தன்னிச்சையாக அனுப்பப்பட்டுள்ளது எனவும், இதனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் 69% இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் எனவும், மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் பல்கலைக்கழகம் சென்றுவிடும் எனவும், திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மாணவர்களின் கல்வி உரிமையைப் பாதிக்கின்ற உயர் சிறப்புத் தகுதி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேவையில்லை என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அறிவித்தார்.

இதுதொடர்பாக, மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- திமுகவின் கடும் எதிர்ப்பு, திமுக இளைஞரணி மற்றும் மாணவரணியின் சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் எழுச்சிமிகு போராட்டம் ஆகியவற்றுக்குப் பிறகு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், 'அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை எனத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது' என்று அறிவித்துள்ளது காலதாமதமானது என்றாலும்; வரவேற்கத்தக்கது.

அமைச்சர் இப்படிப் பேட்டி கொடுப்பதைவிட, தமிழக அரசின் இந்த முடிவினை உடனடியாக மத்திய அரசுக்குக் கடிதம் வாயிலாக, வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

அரசின் கொள்கை முடிவில் தலையிட்டு, தன்னிச்சையாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, மிகப்பெரிய பிரச்சினையை உருவாக்கிய, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்வதற்கு, பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் தமிழக ஆளுநருக்கு முதல்வர் பழனிசாமி உடனடியாகப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

click me!