
55 ஆண்டுகளுக்கு முன்பு 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வராக அண்ணா பதவியேற்ற நாள் (06-03-1967) இன்று.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்தது. சுதந்திரத்துக்கு பிறகு 1952-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. தொடர்ந்து 1957, 1962 ஆகிய காலகட்டத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியைப் பிடித்தது. இந்தக் காலகட்டங்களில் ராஜாஜி, காமராஜர், பக்தவச்சலம் ஆகியோர் தமிழகத்தின் முதல்வர்களாக இருந்தனர். 1957 சட்டப்பேரவைத் தேர்தலில் முதன் முறையாகப் போட்டியிட்ட திமுக, 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 1962 தேர்தலில் திமுக 50 தொகுதிகளில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியானது.
1962-இல் முதல்வராகப் பதவியேற்ற காமராஜர், பின்னர் ஆட்சியை பக்தவச்சலத்திடம் ஒப்படைத்துவிட்டு, கட்சிப் பணிக்கு சென்றார். இந்தக் காலகட்டத்தில் திமுகவும் வேகம் பிடிக்கத் தொடங்கியது. கட்சி நிறுவனர் அண்ணா, 1962-இல் நாடாளுமன்ற உறுப்பினராகி தமிழகம் மற்றும் தென்னிந்தியாவின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருந்தார். 1965 ஆம் ஆண்டு இந்தி திணிப்பு நடந்தபோது அதற்கு திமுக கடுமையாக எதிர்வினையாற்றியது. மாணவர்களும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் களமிறங்கி ஈடுபட்டனர். இந்தி விவகாரத்தில் தமிழகம் கொதி நிலையில் இருந்தது. காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்தமாக 20 ஆண்டுகளை ஆண்டிருந்த நிலையில் 1967- ஆம் ஆண்டு தேர்தல் வந்தது.
இந்தத் தேர்தலில் திமுக அமோகமாக வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 179 இடங்களில் வென்ற நிலையில், திமுக மட்டும் 137 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சட்டப்பேரவை கட்சித் தலைவராக அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்தின் முதல்வராக 06-03-1967 அன்று அண்ணா பதவியேற்றார். அவரோடு நெடுஞ்செழியன், மு. கருணாநிதி உள்ளிட்டோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். திமுக முதன் முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்து இன்றோடு 55 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தற்போது ஆறாவது முறையாக திமுக ஆட்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.