யாருக்கு நீ ஏணியாக மாறினாயோ அவரே உன்னை ஒருநாள் எட்டி உதைப்பார்!: - ஆட்டோவின் முதுகில் மட்டுமல்ல அரசியல் கட்சி அலுவலகங்களில் ஒவ்வொன்றிலும் பொன்னால் பொறிக்கப்பட வேண்டிய வாசகம் இது
யாருக்கு நீ ஏணியாக மாறினாயோ அவரே உன்னை ஒருநாள் எட்டி உதைப்பார்!: - ஆட்டோவின் முதுகில் மட்டுமல்ல அரசியல் கட்சி அலுவலகங்களில் ஒவ்வொன்றிலும் பொன்னால் பொறிக்கப்பட வேண்டிய வாசகம் இது. போஸ்டர் ஒட்டி, கோஷம் போட்டு, கொடி பிடித்து தங்களை வளர்த்து விடும் தொண்டர்களை மனித கேடயமாக பயன்படுத்தும் தலைவர்களின் பார்வையில் இந்த வாக்கியம் பட்டுக் கொண்டே இருந்தால்தான் கொஞ்சமாவது நியாயத்துடன் நடந்து கொள்வார்கள் தங்களை நம்பிப் பிழைக்கும் தொண்டர்களிடம்.
சரி மேட்டருக்கு வருவோம்!
ஜெயலலிதா காலத்து ‘நமது எம்.ஜி.ஆர்’ அதன் பின் ‘நமது அம்மா’ ஆகியவற்றின் ஆசிரியராக இருந்தவர் மருது அழகுராஜ். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது, அதிலும் இரு ஒருங்கிணைப்பாளர்களும் இணைந்து ஆட்சி செலுத்தியபோது நமது அம்மாவில் இவர் எழுதும் போற்றுதல் கவிதைகள் எல்லாம் புல்லரிக்க வைக்கும். ‘ஓணாண்டிப் புலவருக்கே பாடமெடுக்கும் அளவுக்கு தலைமக்கு சோப் போடும் தந்திர, மந்திரங்களை கற்றவர் மருது’ என்று முரசொலியின் சிலந்தி பகுதியில் வெச்சு வெளுப்பார்கள்.
அப்பேர்ப்பட்ட மருது இன்று தனது ஃபேஸ்புக்கில் ஒரு கவிதை பதிவினைப் போட்டுள்ளார் அதன் ஹைலைட் வரிகள்…”தலைமை யார் என்பதை தொண்டன் முடிவு செய்யட்டும்! ‘தலைவர்களே ஒற்றுமையாய் நடங்கள்’ என்று தொண்டர் கூடி வேண்டுகிற துயர நிலை ஏன் வந்தது?, ஒரு புறம் வேடன், மறுபுறம் நாகம் இரண்டுக்கும் நடுவே இரட்டை இலை எனும் கலைமான்…அம்புட்டுதான்.” என்று எழுதியுள்ளார்.
மருதுவின் இந்த பதிவை பார்த்துவிட்டு தங்களுக்கே வகுப்பெடுக்குமளவுக்கு தில்லு வந்துடுச்சா என்று இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருவரும் மருது மீது மண்டை காய்ச்சல் கோபத்தில் உள்ளனர்.
அதேவேளையில் சசிகலாவின் விழுதுகளோ அவரை புரட்டி எடுத்துள்ளனர் விமர்சனத்தில். ”ஒரு காலத்தில் சின்னம்மாவின் ஆசிக்கும், அவரது கரிசன பார்வைக்கும் ஏங்கிய மருது இன்று அவரை ‘நாகம்’ என்று எழுதுவதா? வேடன் என்று தி.மு.க.வை குறிப்பிட்ட மருது, ‘நாகம்’ என்று சொல்லியுள்ளது சின்னம்மாவை தானே! தியாகத்தலைவியை நன்றி மறந்து விமர்சிக்கும் இந்த மருதுவை மிக மிக வன்மையாக கண்டிக்கிறோம்.” என்று விளாசி தள்ளியுள்ளனர்.
ஏன் ஆசிரியரே, இருக்குற பஞ்சாயத்து பத்தாதுன்னு நீங்க வேறயா?!