"வேட்பாளர் சாவுக்குகூட வராத கமல்ஹாசனுக்கு அரசியல் ஒரு கேடா..?" பொங்கும் மக்கள் நீதி மய்யம்

By Asianet News TamilFirst Published Mar 6, 2022, 2:40 PM IST
Highlights

தேர்தலில் நின்று தோற்ற மணி, போன மாசம் 25-ம் தேதியன்னைக்கு தற்கொலை செய்துகொண்டார்

சினிமா முடிந்ததும் பார்வையாளர்கள் கலைந்து செல்ல, தியேட்டர் காலியாகும். அடுத்த காட்சிக்கு புதிய பார்வையாளர்கள் வருவார்கள், சினிமாவும் துவங்கும். கிட்டத்தட்ட இந்த நிலையில்தான் இருக்கிறது கமல்ஹாசனின் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் நிலையும்.

ஒரு தேர்தல் முடிந்து, அக்கட்சியின் தோல்வி ரிசல்ட் வெளியானதும் பல நிர்வாகிகள் கழன்று செல்வார்கள். பின் அடுத்த தேர்தல் வரையில் கட்சியை ஏதோ ஓட்டிக் கொண்டிருப்பார் கமல். பின் அடுத்த தேர்தல் வந்ததும் இருப்பவர்களில் புதியதாக சிலரை வேட்பாளர்களாக்கி அரசியலை துவக்குவார். இதைத்தான் கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் அவர் செய்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின் அவர் கட்சியிலிருந்து பலர் கழன்று கொண்டுள்ளனர். காரணம் கட்சி கன்னாபின்னாவென தேய்ந்து கொண்டிருப்பதுதான் என்கிறார்கள். சுமார் ஆயிரத்து முந்நூறு இடங்களில் போட்டியிட்டு, ஒரு இடத்தில் கூட ஜெயிக்காத ஒரு அமைப்பை எப்படி கட்சி என்று சொல்வது? என கேட்கிறார்கள் அக்கட்சியிலிருந்து வெளியேற துடிப்போர். அதுவும் எம்.பி. தேர்தல், எம்.எல்.ஏ. தேர்தல் என்றாலும் கூட பரவாயில்லை. இது வெறும் கவுன்சிலர் தேர்தல். இதில் கூட கமல் டீம் வின் பண்ணவில்லை என்றால், இனி இதற்கும் கீழே என்ன இருக்கிறது? என்பதுதான் அவர்களின் கேள்வி.

தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சியிலும் இருந்துவிட்டு கடைசியாக கமலின் மக்கள் நீதி மய்யத்திலும் சில காலம் ஓய்வெடுத்துவிட்டு கடைசியில் அதிலிருந்தும் வெளியேறிவிட்டார் பல கரைவேட்டி கண்ட பழ.கருப்பையா.  அவர் “கமல் பாவம் அவரை விடுங்க. அவரையெல்லாம் பத்தி பேச ஒண்ணுமே இல்ல.” என்று தவிர்க்குமளவுக்கு கமல் நிலை போயிருப்பதுதான் மெகா கேவலம்.

நிர்வாகிகள் மட்டுமல்ல கமல் கட்சியின் உறுப்பினர்களும் கொத்துக் கொத்தாக அங்கிருந்து கழன்று கொள்ள துடிக்கின்றனர். குறிப்பாக திருப்பூர் மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி விரைவில் கலைந்து காணாமல் போகும் நிலையில் உள்ளது. ஏன் இப்படி ஒரு நிலை? என்று அக்கட்சியினரிடம் கேட்டால் “திருப்பூர் மாநகராட்சியின் 36வது வார்டில் போட்டியிட்ட மணி என்பவர் தேர்தல் செலவுக்காக ஐம்பாதியிரம் ரூபாய் கடன் வாங்கினார். தீவிரமாய் பிரசாரம் செய்தும் அவருக்கு கிடைச்ச ஓட்டுக்கள் வெறும் நாற்பத்து நாலுதான். அதாவது அந்த வார்டில் உள்ள எங்கள் கட்சி உறுப்பினர்களும், கமல் ரசிகர்களும் கூட ம.நீ.ம.வுக்குன ஓட்டு போடலை.

தற்கொலை செய்து கொண்ட வேட்பாளர் மணி

வாக்கு எண்ணிக்கை முடிஞ்சதுல இருந்து ரொம்பவே நொந்து போய் இருந்த மணி, போன மாசம் 25-ம் தேதியன்னைக்கு தற்கொலை பண்ணிகிட்டார். அவர் இறப்பு பற்றி கமலுக்கு சேதி சொன்னோம். ஆனால் ஒரு ரியாக்‌ஷனுமில்லை. கட்சிக்காக கடன் வாங்கி தேர்தல்ல நின்னு தோற்றுப் போயி, மனசுடைஞ்சு தற்கொலை பண்ணி செத்துப்போன கட்சிக்காரனோட இழவுக்கு கூட அவரு வரலை. ஒரே ஒரு போன் போட்டு ஆறுதல் மட்டும் சொல்லிட்டு முடிச்சுட்டார். கட்சிக்காக தானே கடன் வாங்கி மணி செத்தார். அவர் குடும்பத்துக்காக கமல் என்ன செஞ்சார்? ஃபோன்ல ஆறுதல் சொன்னா மணியோட குடும்பத்துக்கு சோறு கிடைச்சுடுமா. இதுதான் உண்மையான விசுவாசிகளுக்கு கமல் தரும் மரியாதையா..?

கட்சிக்காரன் சாவுக்கு கூட வராம அப்படி என்ன வேலை? அதனாலதான் கேட்கிறோம் இந்த அரசியல் ஒரு கேடா?ன்னு.” என்று நரம்பு புடைக்க கேட்கின்றனர்.

என்னாங்க கமல்ஹாசன், முடிச்சுடலாங்களா?

click me!