சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் கட்சிக்கட்டுப்பாட்டை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை
கடலூர் திமுக எம்.எல்.ஏ கோ. ஐயப்பனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துறைமுருகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், 21 மாநகராட்சிகள், 138 பேரூராட்சிகள், 490 ஊராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி கிளீன் ஸ்வீப் வெற்றி எனும் அளவுக்கு பெருவாரியான பதவிகளை அள்ளியது. மேயர், துணை மேயர், பேரூராட்சித் தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் மறைமுக தேர்தல் மூலம் நிறப்பப்பட்ட நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பல இடங்களையும் திமுகவினர் தட்டிப்பறித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கூட்டணி தர்மத்தை மீறிய இந்த செயலை கண்டித்து பல இடங்களிலும் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டன. தொடர்ந்து அக்கட்சித் தலைவர்களின் கோரிக்கையை அடுத்து, திமுகவினர் செயலால் தான் கூனிக் குறுகி நிற்பதாகவும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியோர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தன்னை வந்து சந்திக்குமாறும் முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.
சிலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தாலும், பலர் ராஜினாமா செய்ய மறுக்கின்றனர். அதில் கடலூர் நெல்லிக்குப்பம் நகராட்சியும் ஒன்று. நெல்லிக்குப்பம் நகராட்சித் த்லைவர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் திமுக சார்பில் ஜெயந்தி என்பவர் போட்டி வேட்பாளராக நின்று வெற்றி பெற்று, விசிகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ஸ்டாலினே சொல்லியும் அவர் இன்னும் ராஜினாமா செய்யவில்லை.
இது குறித்து விசாரித்தபோது, கடலூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பனுக்கும் இதில் தொடர்பிருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து ஐயப்பன் மீது தற்போது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சிக்கட்டுப்பாட்டை மீறியும், கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்திலும் செயல்பட்டதால் கடலூர் எம்.எல்.ஏ கோ. ஐயப்பன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
கட்சித் தலைமையின் அறிவிப்பிற்கு எதிராக செயல்படுவோர் யாராக இருந்தாலும், அது அடிமட்ட தொண்டரோ அல்லது மூத்த தலைவரோ, சட்டமன்ற உறுப்பினரோ யாரானாலும் கடும் நடவடிக்கை பாயும் என்று ஸ்டாலின் விடும் எச்சரிக்கையே இந்த அறிவிப்பு. இதைத் தொடர்ந்து, இன்னும் ராஜினாமா செய்யாத அதிருப்தி திமுகவினரும் உடனடியாக ராஜினாமா செய்யாவிட்டால், அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.