
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மகளிரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது. நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பாண்மையான இடங்களில் வெற்றி பெற்றது. பின்னர் மேயருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் திமுகவுக்கும் கூட்டணி கட்சிகளுக்கு இடையே சில சலசலப்பு ஏற்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த பிரச்சனையை ஒருவழியாக முடிவுக்கு கொண்டு வந்தார். இந்த நிலையில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மாநில மகளிரணியின் துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த மீனா ஜெயக்குமார் என்பவர் அண்மையில் அதே மாவட்டத்தை சேர்ந்த திமுக எம்எல்ஏ கார்த்திக் முன்னிலையில் அவரது மனைவிக்கு எதிராக முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்தார்.
இது பெரும் சர்ச்சையானது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்களுடனான ஆலோசனை கூட்டம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில மகளிரணி துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசினார். மேயர் கனவோடு இருந்த அவர் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முன்பே தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து, தேர்தல் பரப்புரையிலும் ஈடுபட்டார். ஆனால், தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால், கடுப்பான அவர், செயற்குழு கூட்டத்தில் தனது பேச்சின் மூலம் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவர் பேசுகையில், திமுக கோவை கிழக்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான கார்த்திக்தான் தன் வெற்றியை தடுத்தார் என்று தெரிவித்தார்.
மேலும் மேடையில் வைத்து அவரிடம், உன் பொண்டாட்டிக்கு சீட் வேணும்னா நீ தாரளமாக கேட்டிருக்கலாம். அதற்காக என் வாய்ப்பை மறுப்பதா? என் வளர்ச்சியை தடுக்க இந்த ஆள் யாரு? என்று ஒருமையில் பேசினார். இதுதான் சர்ச்சையானது. இதை அடுத்து மீனா ஜெயக்குமாரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள உத்தரவில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார், கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.