அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் அந்த அலுவலக சீலை அகற்ற கோரி ஓபிஎஸ்- இபிஎஸ் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
அதிமுக அலுவலகத்திற்கு சீல்
ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுகவில் ஓபிஎஸ்- இபிஎஸ் என பிளவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவில் இருந்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இடங்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை வானகரத்தில் பொதுக்குழு நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களோடு சென்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவகத்தை கைப்பற்றினார். அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் 45க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஏராளமான வாகனங்களும் அடித்து உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளனர். மேலும் வருகிற 25 ஆம் தேதி ஓபிஎஸ்-இபிஎஸ் என இரண்டு தரப்பும் நேரில் ஆஜராக வேண்டும் என வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பொன்னையன் ஆடியோ போல் விரைவில் பல ஆடியோக்கள் வெளிவரும்..! எடப்பாடி பழனிசாமியை அலற வைத்த புகழேந்தி
சீலை அகற்ற வேண்டும்
இந்தநிலையில் அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரி ஓபிஎஸ்- இபிஎஸ் இரண்டு தரப்பும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி ஒ.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்த மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. சொத்து உரிமை தொடர்பாக எந்த பிரச்னையும் இல்லை எனவும், கட்சியின் தலைமை நிலைய செயலாளர், இடைக்கால பொதுச்செயலாளர் என்ற முறையில் கட்சி அலுவலகத்தின் உரிமை தனக்கு உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எனவே, கட்சி அலுவலகத்தை சீல் வைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
மீண்டு வந்த திமுக ஐ.டி விங் ட்விட்டர் பக்கம்.. திமுகவா ? பாஜகவா ? - டி.ஆர்.பி ராஜா கலாய்!
உரிமைகள் உள்ளது-ஓபிஎஸ்
இதேபோல அதிமுக ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி ஓ.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்த மனுவில், எதிர்மனுதாரராக எடப்பாடி பழனிசாமியை இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார்.ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சி தலைமை அலுவலகத்துக்குள் நுழைய தனக்கு எல்லா சட்டப்பூர்வ உரிமைகளும் உள்ளதாகவும் கூறியுள்ளார். கட்சி தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்ட போது அது தங்கள் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.இந்த இரு வழக்குகளும் உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. எனவே இன்றைய விசாரணையில் அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்படுமா? கட்சி அலுவலகம் யாருக்கு என்ற முடிவு இன்று விசாரணையின் போது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்
வாக்கி டாக்கி ஊழல்.. ஜெயக்குமாருக்கு அதிர்ச்சி கொடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை..!